12. உண்மை கூறும் தமிழ்ப் புலவர்க்கு அலுவற் பதவியில்லா வாறு செய்தல். இவற்றின் விளக்கத்தை என் தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் மதம் என்னும் நூல்களுட் கண்டு கொள்க. 6.குமரிக்கண்ட இடப்பெயரும் மூவேந்தர் குடிப்பெயரும்இடப்பெயர் குமரி தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டிநாடும் தென் மாவாரியில் முழுகிப்போன பெருநிலமுமான குமரிக்கண்டத்தின் தென்கோடி யடுத்து, பனிமலை (இமயம்)போலும் ஒரு மாபெரு மலைத் தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக்கண்டம் எனப்பட்டது. "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள" (சிலப்.11:19-20) குமரி என்பது காளியின் பெயர். காளி தமிழர் தெய்வங்களுள் ஒன்று. இறவாதவள் அல்லது என்றும் இளமையாயிருப்பவள் என்னும் கருத்தில், காளியைக் குமரி என்றனர். கும்முதல் திரள்தல். கும்மல் - கும்மலி = பருத்தவள். கும் - குமல் - குமர் = திரட்சி, திரண்ட கன்னிப்பெண், கன்னிமை. குமர் - குமரன் = திரண்ட இளைஞன். இளைஞனான முருகன். குமர் - குமரி = திரண்ட இளைஞை (கன்னி). மணப்பருவமான இளமை வரும்போது உடல் திரளுதல் இயல்பு. பொலியும் பருவ விலங்குகளையும் முட்டையிடும் பருவப் பறவைகளையும் விடை என்று கூறுதல் காண்க. விடைத்தல் பருத்தல். குமரன், குமரி என்னும் தூய தமிழ்ச்சொற்களைக் குமார, குமாரீ என நீட்டி, முறையே மகன், மகள் என்னும் பொருள்களிற் சிறப்பாய் ஆள்வதுடன் குமார என்பதைக் கு + மார எனப் பிரித்து, மரியாதவன் என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர் வடமொழியாளர். இவ் விரு சொற் கட்கும் இளமைப் பொருளே சிறந்திருத்தலை, வழக்கு நோக்கியும், "கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப் பெண்ணுக்கு ஒரு பிள்ளைக என்னும் பழமொழி நோக்கியும், உணர்க. இளமைக்குப்பின் மூப்பும் சாக்காடும் நேர்வதால் இளமைக் கருத்தினின்றே அழியாமைக் கருத்துத் தோன்றும். எவ்வளவு |