பக்கம் எண் :

14பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   உடலுரம் பெற்றவராயினும் நகைச்சுவையும் உவமையும்பற்றி யன்றிக் கிழவன் கிழவியைக் குமரன் குமரியென்னும் வழக்கமின்மை காண்க.
   குமரிக்கண்டத்தின் வடகோடியில், குமரி என ஒரு பேரியாறு மிருந்தது.


மதிரை-மதுரை

   மதுரை என்பது குமரிமலைத் தொடரிற் பிறந்து கிழக்கு முகமாய் ஓடிக் கீழ்கடலிற் கலந்ததும், கங்கை போலும் பெரியது மான பஃறுளி யாற்றங்கரையில் அமைந்த பாண்டியரின் முதல் தலைநகரும் தலைக்கழக இருக்கையுமாகும்.

   பாண்டியர் திங்கள் குலத்தாராகலின், தம் குலமுதலாகக் கருதிய மதியின் பெயரால், தம் முதல் தலைநகர்க்கு மதிரை எனப் பெயரிட்டனர். அது பின்னர் மதுரை எனத் திரிந்தது.

ஒ.நோ: குதி - குதிரை, எதிர்கை - எதுகை.

   குமரிமலை முழுகுமுன்போ முழுகிய பின்போ, குமரி நாட்டினின்று வடக்கே சென்ற தமிழர் வழியினரே, கண்ணபிரான் வாழ்ந்த மதுரையையும் அமைத்தனர். அதற்கு அப் பெயரிட்டது, அவர்தம் முன்னோர் இடத்தை நினைவுகூர்தற்பொருட்டாகும். கண்ணபிரான் ஒரு திரவிட மன்னனே என்பது, என் தமிழர் வரலாறு என்னும் நூலில் விளக்கப் பெறும்.

   கண்ணபிரான் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரையில்லை. ஆதலால், நாவலந்தேயத்தில் இரண்டாவது ஏற்பட்டதும் வடமதுரை யெனப்பட்டதும் கண்ணன் மதுரையே. அதன் பெயர் அந்நாட்டு மொழிக்கேற்ப மத்ரா எனப் பின்னர்த் திரிந்தது.

   சிவபெருமான் தன் சடைமுடியிலுள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்பது, தொல்கதைக்கட்டு.

   வைகை மதுரையைச் சார்ந்த திருமருத முன்றுறையால் மதுரைப் பெயர் வந்த தென்பது, பேரன் பெயரால் பாட்டன் பெயர் பெற்றான் என்னும் கூற்றை ஒக்கும். மதுரையென்று முதலிற் பெயர் பெற்றது பஃறுளி யாற்றங்கரையது என்பதை மறந்துவிடல் கூடாது.

கன்னி

   முழுகிப்போன குமரிக்கண்டம், தென்கோடியில் குமரி என்னும் மலைத்தொடரையும் வடகோடியில் குமரி என்னும் பேரியாற்றையும் கொண்டிருந்தமை, முன்னர்க் கூறப்பட்டது.