பக்கம் எண் :

130பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   வெண்கலம் தமிழர், முதன் முதல் அமைத்த கலவைக் கனியமாகத் தோன்றுகின்றது. அதன் ஒரு சொற்பெயர் உறை, முறி என்பன.

(11) இதள்மாற்றியம் (இரசவாதம்)

   சித்தர் இதளினால் (பாதரசத்தால்) தாழ்ந்த கனியங்களை (உலோகங்களை) வெள்ளியாகவும் சிறப்பாகப் பொன்னாகவும் மாற்றினதாக, மருத்துவ நூல்கள் கூறும். அப் பொன்னாக்கம் வடமொழியில் (இ)ரசவாதம் எனப்படும். அக் கலையைக் குறிக்கும்
Alchemy என்னும் சொல்லிலிருந்து Chemistry என்னும் சொல் தோன்றியிருத்தலால், கெமிய நூலை ரஸாயனம் என்றனர். இம் முறையில் அதைத் தமிழில் இதளியம் எனலாம்.

   பொன்னாக்கம் எகிப்து
(Egypt) நாட்டில் வழங்கியதால், அக் கலை அரபியில் அல்கிமிய (al - kimia) எனப்பட்டதென்றும், அல் என்பது அந்த என்று பொருள்படும் சுட்டுச்சொல் லென்றும், கிமிய என்பது எகிப்து நாட்டின் பெயரென்றும், எருதந்துறை ஆங்கிலச் சுருக்க அகரமுதலி கூறும். (The Concise Oxford Dictionary of Current English).

   "அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்" என்று தாயுமானவர் பாடுவதால் (பரிபூர.10), இதள் மாற்றியக் கலை தமிழ்நாட்டில் இருந்தமை அறியப்படும்.

   பொதுவாக, இது சித்தர்கலை யெனப்படும். இராமலிங்க அடிகள் சித்தநிலை யடைந்திருந்ததினால் இக் கலையை அறிந்திருந்த னர்.

(12) மறநூல்

  தனிமக்கள் போர், படைமக்கள் போர் எனப் போர் இரு திறப்படும். சிலம்பம், மற்போர், குத்துச்சண்டை, வாட்போர் முதலியன தனிமக்கள் போராம்.

   முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்ற கோப்பெருநற்கிள்ளி, ஒரு போரவை நடத்தி வந்தான்; அதனால், போரவைக் கோப்பெருநற்கிள்ளி எனப்பட்டான். அவன் நடத்தி வந்தது மற்பயிற்சிக் களரி. மற்போரில், சில உயிர்நாடியான நரம்புகளைத் தொட்டு, எதிரியை வீழ்த்திக் கொல்லவும், வீழ்ந்த வனை மூன்றே முக்கால் நாழிகைக்குள் எழச்செய்யவும், சில மருமப் பிடிகள் உள.

   மற்களரி, விற்களரி, வாட்களரி எனப் போரவை அல்லது முரண்களரி பலவகைப்படும்.