தாட்படுத்த பொறிகளும், பன்றிமுதல் நுண்ணூலீறாக வுள்ளவையும் திருந்திற்றென்க" என்று நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளபடி, 103ஆம் செய்யுளிற் குறிப்பிட்டுள்ள பொறி களையே யவனர் செய்ததாகத் திருத்தக்கதேவர் கூறியுள்ளார். அவை பிறவற்றைப்போல் அத்துணைச் சிறந்தன வல்லவாதலாலும், திருத்தக்கதேவர்க்கு ஏழு நூற்றாண்டுகள் முந்திய இளங்கோவடிகள் அங்ஙனம் கூறாமையானும், சிலப்பதிகாரம்போல் சிந்தாமணி உண்மைக் கதையைத் தழுவாமையானும், தமிழர் கிரேக்கருக்கு முற்பட்ட இனத்தாராதலாலும், மேலை மருத்துவத்தை மேலையரி டம் கற்ற கீழையர் மேலைநாடுகளிலும் பணியாற்றுவதுபோல் யவனர் சில பொறிகள் செய்திருக்கலாமாதலாலும், இற்றை வானூர்திக் கொப்பான மயிற்பொறியை யவனர் செய்ததாகத் தேவர் கூறாமையானும், சிந்தாமணிக் கூற்று கொள்ளத் தக்கதன் றென்றும், அதனால் பண்டைத் தமிழப் பொறிவினைக் கம்மியர்க்கு இழுக் கில்லையென்றும், கூறி விடுக்க. (10) பொன்நூல் "சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கை" (சிலப். 14: 201-2) என்பது, பொன்னின் வகைகளைக் காட்டும். ஜாத ரூப்ப என்னும் வடசொல் பொலிந்த வடிவம் என்றும், ஹாட்டக என்னும் வடசொல் ஒளிர்வது என்றும் பொருள்படும். இவற்றைப் பொன் என்றும் தங்கம் என்றும் சொல்லலாம். ஜம்பூநத என்னும் வடசொல், பொன் (மேரு) மலைக்கு வடக்கில் நாவற் பழச்சாறு பெருகியோடுவதாய்க் கருதப்பட்ட ஆற்றின் பெயர். இது ஆரியத் தொல்கதைக் கொள்கை. இதன்படி, சாம்பூநதத்தை நாவலாறை என்று சொல்லல் வேண்டும். பண்டைத் தமிழ்மக்களின் ஏமாறுந்தன்மையைப் பயன் படுத்திக் கொண்டு, ஆரியர் இங்ஙனமே எல்லாத் துறைகளிலும் தமிழ்நாட்டுப் பொருள்கட்கு வடசொற் பெயர்களையிட்டு வழக்காற்றுப்படுத்தி யிருக்கின்றனர். பொன் என்பது, பொன்போன்ற பிற கனியப் பொருள்களை யுங் குறிக்கும். வெள்ளி, செம்பு, இரும்பு , ஈயம் முதலிய பிற கனியங்களும் பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தன. ஈயம் என்பது இளகுவது என்னும் பொருளது. ஈயம் - ஸீஸ (வ.). இள் - (இய்) - ஈ - ஈயம். ஒ.நோ: எள் - எய். எய்த்தல் இளைத்தல். |