அன்பெனுங் கடத்து ளடங்கிடுங் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே" என்னும் இராமலிங்க அடிகள் பாட்டும் அதுவே. இறைவனிடத்தில் அடியார் சிற்றின்பத்தை வேண்டுவதினும் பேரின்பத்தை வேண்டுவதே தக்க தென்பதை, "..........யா அம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே"........ (5:78-81) என்னும் பரிபாடலடிகள் உணர்த்தும் காரைக்காலம்மையார் வேண்டியதும் அதுவே. "தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்" (நாலடி. 58) என்பதும் அந்தணர் பண்பாட்டை யுணர்த்தும். "அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்" (குறள். 30) என்று அந்தணர் சிறப்பியல்பாகக் கூறப்படும் அருளுடைமை, மூலன் என்னும் இடையன் காட்டில் இறந்தபின் அவன் மந்தை மாடுகள் கதறியதைக் கண்டிரங்கி, திருமூலர் அவனுடம்பிற் புகுந்து அவற்றை வீடுகட்குக் கொண்டுபோய்ச் சேர்த்தமையால் அறியப்படும். (2) பார்ப்பாரது: புலவர், ஆசிரியர், பூசாரியார், கணியர், ஓதுவார், கணக்கர் எனப் பல்வேறு பெயர் பெற்றுக் கல்வித்தொழில் புரியும் இல்லற வகுப்பார் பார்ப்பார் ஆவர். நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார், அல்லது பார்ப்பனர். பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபன்று. பார்த்தனன், பார்கின்றனன், பார்ப்பனன் என்னும் அனன் ஈற்றுச் சொற்கள்; பார்த்தான், பார்க்கின்றான், பார்ப்பான் என்னும் ஆன் ஈற்றுச் சொற்களின் மறு வடிவங்களாகவே யிருத்தல் காண்க. "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் |