மந்திரம் - Skt. mantra. சூழ்வினை செய்யும் அமைச்சன் மந்திரி என்றும், பேய்களைத் துணைக்கொண்டு படைப்பும் கட்டும் சாவிப்பும் செய்பவன் மந்திரக்காரன் என்றும், பெயர் பெறுவர். மந்திரி - Skt. mantrin, Hind. mantri, Port. mandarim, Ch. mandarin. மந்திரத்தால் திருமன்றாட்டுச் செய்தல் மந்திரத்தை உருவேற்றுதல் அல்லது உருப்போடுதல் என்றும், அதனால் நோய் நீக்குதல் மந்திரித்தல் என்றும், அதனால் தீங்கு செய்தல் மந்திரம் பண்ணுதல் என்றும் சொல்லப்படும். ஆரிய வேத மந்திரங்கள் இயற்றப்படுமுன்னரே, தமிழில் மந்திர நூல்கள் இருந்தன. தொல்காப்பியம் கூறும் எழுவகைச் செய்யுள் நிலைக்களங்களுள் மந்திரமும் ஒன்று. "பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்." (தொல். 1336) வாய்மொழியையே தொல்காப்பியர் வேறிடத்தில் மந்திரம் எனக் குறிப்பர். "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப.’" (தொல். 1434) சமயக் கொண்முடிபு நூல் ஒத்தெனவும்படும். ஓதுவது ஓத்து. "உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான்." (977) என்பது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி.மு. 6ஆம் நூற்றாண்டினதேனும், அதிற் சொல்லப்பட்டுள்ள இலக்கணங்கள் ஆரிய வருகைக்கு முந்தியன வாகும். சிவநெறியும் திருமால் நெறியும் தமிழர் சமயங்களென்றும், தமிழ் ஆரியத்தின் மூலமொழியென்றும், உண்மையறியப்பட்டபின், மந்திரம் வடசொல்லென ஒருவரும் மயங்கார் என்பது திண்ணம். |