பக்கம் எண் :

18பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
 விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
 மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள்
 மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
 நாலேழ் நாளினும் நன்கினி துறைகென
 அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது’’
(மணிமே. 1: 4-9)
 "கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
 தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
 தபுதி யஞ்சிச் சீரை புக்க
 வரையா ஈகை உரவோன் மருக"
(புறம். 43: 5-8)


என்பன, சிபியையும் அவன் வழியினரையும் உறையூரிலும் புகாரிலிலுமிருந்தாண்ட சோழ வேந்தராகவே குறிப்பாயுணர்த்துதல் காண்க. சிபி என்பதன் தமிழ் வடிவம் சிம்பி அல்லது செம்பி என்றிருந்திருக்கலாம். வரலாற்றிற்கு முந்திய காலத்தில், சோழனுக்குப் பனி மலைவரையும் ஆட்சியிருந்ததாகத் தெரிகின்றது. ஏறத்தாழ ஈராயிரங்கல் தெற்கே நீண்டிருந்த குமரிக்கண்டம் பழம்பாண்டி நாடாயிருந்ததை நோக்கும்போது, பனிமலைவரை சோழனாட்சி பரவியிருந்தது வியப்பாகத் தோன்றாது. வேங்கடத்திற்கு வடக்கி லுள்ள கொடுந்தமிழ்நாடு வடுக நாடாய்த் திரிந்தபின், அந் நாட்டுச் சோழர் குடியினர் சோடர் எனப்பட்டார்.

சேரன்

   மேற்புறமாயினும் கீழ்ப்புறமாயினும், சேரநாடு முழுவதும் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலை களின் அடிவாரச் சரிவே. மலையடிவாரம் சாரல் எனப்படும்.

"சாரல் நாட செவ்வியை யாகுமதி" (குறுந். 18:2)

"சாரல் நாட நடுநாள்"
(குறுந். 9)

"சாரல் நாட வாரலோ எனவே"
(குறுந். 141:8)

என்பன, மலைப்பக்க நாட்டைச் சாரல்நாடு எனக் கூறுதல் காண்க.

   சாரல் - சேரல் - சேரலன் - சேரன். மலையரணைக் குறிக்கும் குறும்பு என்னும் சொற்போல், சேரல் என்பதும் இடவாகு பெயராய் அரசனை உணர்த்தும்.

   சேரலன் - கேரளன்.

   செங்குட்டுவனிலும் சிறந்த மாவலி என்னும் சேரவேந்தனின் ஆட்சி, வேம்பாய்
(Mumbay) வரையும் பரவியிருந்தது.