பாண்டி = எருது (பரிபா. .20:17 குறிப்பு). பாண்டி - பாண்டியம் = எருது,"செஞ்சுவற் பாண்டியம்" (பெருங். உஞ்சைக். 38:32). பாலை நிலத் தலைவனும் வயவனும் (வீரனும்) காளையெனப் படுதல் இங்குக் கவனிக்கத்தக்கது. "மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து" (624) என்னும் குறளும் இங்கு நோக்கத்தக்கதாம். பாரதப் போர்க்கு முந்தியே பாண்டியர் இருந்ததால் பாண்ட வன் என்னும் சொல்லைப் பாண்டியன் என்னும் பெயர்க்கு மூலமாகக் காட்டுவது, வரலாற்றறிவில்லார் கூற்றாம். பாண்டவ கௌரவர் குடியான பரத மரபு. தென்னாட்டினின்று வடநாடு சென்ற பாண்டியர் குடிக் கிளையே. இதன் விளக்கத்தை என் தமிழர் மரபு என்னும் நூலுட் காண்க. "வேழ முடைத்து மலைநாடு மேதக்க சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோ ருடைத்து" என்றார் ஒளவையார். சோழ நாட்டிற்குப் புனல்நாடு, வளநாடு என்றும், சோழனுக்கு வளவன் என்றும் பெயர். சோறென்பது நெற்சோறே. சொல் = நெல். சொல் - சொன்றி, சோறு. சொல் இயற்கையாகவோ மிகுதியாகவோ விளைந்தது சோழ நாடெனப்பட்டது. சொல்லாக்கத் திரிவில் லகரம் ழகரமாவது இயல்பே. ஒ.நோ : கல் - கள் - காள் - காழ் - காழகம் = கருமை. கில் - கீழ் - தோண்டு. கெல் - கேழல் = தோண்டும் பன்றி. சுல் (வளை) - சூழ். துல் (பொருந்து) - தோழம் - தோழன். புல் (துளை)- பூழை. பொல் (பிள) - போழ். தசரதனின் முன்னோராகச் சொல்லப்பட்ட முசுகுந்தன், சிபி முதலியோர் வடநாட்டையும் ஆண்ட சோழ மாவேந்தரே. "வெற்றிவேல் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைக" (சிலப். 5:65-7) என்பது, முசுகுந்தனையும், |