| தொழிலும் எங்ஙனம் நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்பது தெளிவாகும். நகர் என்னும் சொல், முதன் முதல், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது. நகர் = 1. வளமனை. "கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்" (புறம்.70) 2. மாளிகை. "பாழி யன்ன கடியுடை வியனகர்" (அகம். 15) மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால், நகர் என்னும் சொல் அரண்மனையையும் அரசன் மனை போன்ற இறைவன் கோயிலையும் பின்பு குறிக்கலாயிற்று. நகர் = 1. அரண்மனை, "முரைசுகெழு செல்வர் நகர்" (புறம். 127) "நிதிதுஞ்சு வியனகர்" (சிலப். 27:200) 2. கோயில். "முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே" (புறம். 6) "உத்தர கோசமங்கை மின்னேறு மாட வியன்மா ளிகைபாடி" (திருவாச. 16:3) என்பதால், கோயிலுக்கும் மாளிகைப் பெயருண்மை அறியலாம். சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம் மாளிகை போன்றிருத்தலால், திருத்தக்கதேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆண்டார். "அணிநகர் முன்னி னானே" (சீவக. 701) நகர் என்னும் சொல் மனையைக் குறித்தலாலேயே மனை, இல், குடி என்னும் சொற்கள் போல் இடவாகு பெயராய் மனைவி யையும் குறிக்கலாயிற்று. நகர் = மனைவி "வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூடி" (கலித். 8) சிறந்த ஓவிய வேலைப்பாடமைந்து சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று வெள்ளையடிக்கப்பட்ட காரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரை வீட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல் விளங்குதல். நகு - நகல் - நகர். வெண்பல்லையும் பொன்மணி யணிகலத்தையும் முகமலர்ச்சியாகிய சிரிப்பையும் உணர்த்தும், நகை என்னும் சொல்லை நோக்குக. நகு - நகை. |