கரும்பிலும், சோளம், நாணல் போன்ற பெருந்தட்டைகளி லும், நுனியிலும் கணுவொட்டியும் பெருந்தாளாக ஓங்கி மடிந்து தொங்குவது தோகை. தென்னை, பனை முதலியவற்றிற்போல், நுனியையும் அடியை யும் ஒருங்கே ஒட்டியே தனித்தனி மட்டையோடு தோன்றி, விசிறி வடிவில் அல்லது தூவுவடிவில் முரடாயிருப்பது ஓலை. ஐவகை மலர்நிலை தோன்றும் நிலை அரும்பு; மலரத் தொடங்கும் நிலை போது;மலர்ந்த நிலை மலர்; கீழே விழுந்த நிலை வீ; வாடிச் சிவந்த நிலை செம்மல். அரும்பு, மொட்டு, முகை, மொக்குள் என்பன, பருமன் பற்றிய வெவ்வேறு அரும்பு வகைகளைக் குறிப்பன. மூவகைக் காய்ப்புநிலை இளங்காய் பிஞ்சு ; முதிர்ந்தது காய்; பழுத்தது பழம் அல்லது கனி. ஆங்கிலம் மிகுந்த வளர்ச்சியுற்று, ஏறத்தாழ மூன்றிலக்கம் சொற்களைக் கொண்டுள்ளது. ஆயினும் இன்னும் அதில் காயைக் குறிக்கச் சொல் அமையவில்லை; பழுக்காத பழம் என்று வட்ட வழியே குறிக்கின்றனர். சிலவகைப் பிஞ்சுகட்குச் சிறப்புப் பெயருமுள. தென்னை, பனை முதலியவற்றின் பிஞ்சு குரும்பை; மாம்பிஞ்சு வடு; பலாப்பிஞ்சு மூசு; வாழைப்பிஞ்சு கச்சல். இங்ஙனமே நிலைத்திணையின் (தாவரத்தின்) எல்லாவுறுப்பு களையும், நுண்பாகுபாடு செய்து, வெவ்வேறு பெயரிட்டிருக் கின்றனர் பண்டைத் தமிழ்ப் பொதுமக்கள். இடங்கர் (alligator) , கராம் (gavial) , முதலை (crocodile) என மூவகையாக முதலைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குதிரை முதற் கடல்கோளுக்கு முன்பே அரபிநாட்டினின்று குமரிநாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அது அயல்நாட்டு விலங்கேனும், அதைப் பல்வேறு வகைப்படுத்தி வெவ்வேறு பெயரிட்டிருக்கின்றனர். புரவி, பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம் என்னும் எண்வகைக் குதிரைகளும் அவற்றின் சிறப்பிலக் கணமும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற் கூறப் பட்டுள (நரிபரி. 87-94). |