பக்கம் எண் :

38பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

இக்காலத்தில் மரக்கறி வகையைச் சேர்ந்த மோர்க்குழம்பு, அக்காலத்தில் ஊன்கறி வகையாகவும் இருந்தது.

"செம்புற் றீயலின் இன்னளைப் புளித்து
..........................................................
இரவலர்க் கீயும் வள்ளியோன் நாடே"
(புறம்.119)


என்று கபிலர் பாரியின் பறம்புநாட்டைப் பற்றிப் பாடியிருத்தல் காண்க. அளை = மோர்.

  விடை என்பது முழு வளர்ச்சியடைந்த இளவிலங்கின் அல்லது பறவையின் பெயர். விடைத்தல் = பருத்தல், விறைத்தல் முறுக்காயிருத்தல். விலங்கினத்தில் ஆணையும் பறவையினத்தில் இரு பாலையும் விடையென்பது மரபு.
 

விடை = 1. காளை.
"தோடுடைய செவியன் விடையேறி" (திருஞான. தேவா.)
2. எருமைக்கடா.
"மதர்விடையிற் சீறி" (பு.வெ.7:14)
3. ஆட்டுக்கடா.
4. ஆண்மரை.
"மரையான் கதழ்விடை" (மலைபடு.331)
5. ஆண் வெருகு.
"வெருக்குவிடை யன்ன வெகுள்நோக்கு" (புறம்.324)
6. ஆண்குதிரை.
7. இளங்கோழி.

கோழிவிடை, சேவல்விடை, விடைக்கோழி என்பன உலக வழக்கு.

   விடை என்பது காளையைக் குறிப்பதால், அதன் பெயரைக் கொண்ட ஓரையையும் (இராசியையும்) குறிக்கும்.

   இங்ஙனம் இருவகை வழக்கிலும் தொன்றுதொட்டு வழங்கி வரும் இத் தூய தமிழ்ச்சொல்லை, வடமொழியில் வ்ருஷ என்று வரி பெயர்த்து. அப் பெயர்ப்பையே தென்சொல்லின் மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர்.

   விடை என்பதினின்று திரிந்ததே விடலை என்னும் பெயரும். ஒ.நோ: கடை = கடலை. விடலை : இளங்காளை, இளைஞன்,