இட்டிது = சிறிது (குறள். 478). இட்டிமை = சிறுமை (திவா.). இட்டிய = சிறிய (ஐங். 215). இட்டிகை என்பது, வடமொழியில் இஷ்டிகா என்று திரிந்து தன் சிறப்புப் பொருளையிழந்து,செங்கல் என்று மட்டும் பொருள் படும். சிறியதும் பெரியதும் உயர்ந்ததும் தாழ்ந்ததும் அல்லாது நடு நிகர்த்தான உறையுள், குடி, மனை, இல், வீடு என்னும் சொற்களுள் ஒன்றாற் குறிக்கப்பெறும். இல்லம், வளமனை, மாளிகை, நகர் என்பன, பெருஞ் செல்வர் வாழும் சிறந்த உறையுளைக் குறிக்கும். அரசர் வாழும் மாளிகை அரண் பெற்றிருக்குமாதலால், அரண்மனையெனப் பெறும்; அரசன் மனை என்னும் பொருளிற் கோயில் என்றும் சொல்லப்பெறும். குடி, நகர், மாளிகை என்னும் தூய தமிழ்ச்சொற்கள் வட மொழிச் சென்றும் வழங்குகின்றன. ஆயின், வடமொழியாளர் உண்மையை ஒப்புக்கொள்ளும் நேர்மையரல்லர். மேனிலையுள்ள வீடு மாடம் எனப்பட்டது. அது உலக வழக்கில் மாடிவீடு எனவும் மெத்தைவீடு எனவும் வழங்கும். இருநிலை முதல் எழுநிலைவரை அக்காலத்து மாடங்கள் கட்டப்பட்டன. "இன்அகில் ஆவி விம்மும் எழுநிலைமாடஞ் சேர்ந்தும்" (சீவக.2840) ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச்சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி(நடை), முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கக்கூசு), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது. மேனிலையில் நிலாமுற்றமிருந்தது. "வகைபெற எழுந்து வானம் மூழ்கிச் சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்" (357-8) என்னும் மதுரைக்காஞ்சி அடிகட்கு, "மண்டபம் கூடம் தாய்க்கட்டு அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்" என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை வரைந்திருத்தல் காண்க: வணங்கு - வாங்கு - வங்கு - அங்கு. ஒ.நோ: வளை - அளை. அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கு - அங்கணம். ஒ.நோ: சாய் கடை - சாக்கடை. காற்று வரும்வழி காலதர், சாளரம், பலகணி என்னும் பெயர் களைப் பெற்றிருந்தது. |