பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்51

"இருநோக் கிவளுண்கண் ணுள்ளது" (குறள் 1091)

   மையூட்டல் கண்ணிற்கு அழகு மட்டுமன்றிக் குளிர்ச்சியும் தருமென்பது, அறிஞர் கருத்து.

   இக்காலத்து மேனாட்டுப் பெண்டிர்போல், அக்காலத் தமிழ்ப் பெண்டிரும் தம் உதடுகட்குச் செஞ்சாயம் ஊட்டி வந்தனர். அது அவரழகைச் சிறப்பித்ததனால் பெண்டிரழகை வர்ணிக்கும் இடமெல்லாம் "இலவிதழ்ச் செவ்வாய்" (சிலப். 14:136) என்றும், "கொவ்வைச் செவ்வாய்" (திருவாச.6:2) என்றும்,"துப்புறழ் தொண் டைச் செவ்வாய்" (சீவக.550) என்றும், பிறவாறும், கூறுவது புலவர் வழக்கமாயிற்று.

   இனி, உள்ளங்காற்கும் செந்நிறம் பெறச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டி வந்தமை.

"அலத்தக மூட்டிய அடி" (மணிமே. 6:110)

என்பதால் அறியலாம். அலத்தகம் செம்பஞ்சுக் குழம்பு.

   மகளிர் மார்பிலும் தோளிலும் காதலர் சந்தனக் குழம்பால் வரையும் ஓவியங்களும், இருபாலாரும் நெற்றியிலும் கையிலும் குத்துவிக்கும் பச்சைக் கோலமும், ஓவிய வுணர்ச்சியை யன்றி நாகரிகத்தைக் காட்டா.

6. உறையுள்

உறையுள் என்பது குடியிருக்கும் வீடு.

   குறிஞ்சிநில வாணரான குறவர் குன்றவர், இறவுளர் முதலிய வகுப்பாரும், பாலைநில வாணரான மறவர், எயினர், வேடர் முதலிய வகுப்பாரும், இலைவேய்ந்த குடிசைகளிலும் குற்றில்களிலும்; முல்லைநில வாணரான இடையர் கூரை வேய்ந்த சிற்றில்களிலும்; மருதநிலச் சிற்றூர் வாணரான உழவர் மண்சுவர்க்கூரை வீடுகளி லும் வதிந்தாரேனும்; மருதநிலப் பேருர் வாணர் ஏந்தான (வசதி யான) பச்சைச் செங்கற் சுவர்க் கூரை வீடுகளிலும் சுட்ட செங்கற் சுவர்க் காரைவீடுகளிலும் வாழ்ந்துவந்தனர். சுட்ட செங்கல் சுடுமண் என்றும் சுடுமட் பலகை என்றும் சொல்லப்பட்டது. பச்சைச் செங்கல் மட்பலகை யெனப்பட்டது.

"சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பில்" (பெரும்பாண். 405)
"சுடுமட் பலகைபல கொணர்வித்து" (பெரியபு.ஏயர்கோன். 49)

சிறு செங்கல் இட்டிகை எனப்பட்டது.

"கண்சொரீஇ இட்டிகை தீற்று பவர்" (பழ. 108)