பிற்காலத்தில் வெண்டையம் எனப்பட்டது. கைமோதிரம் இரு பாலார்க்கும் பொதுவாம். அரசர், பாணனுக்குப் பொற்றாமரையும். அவன் மனைவி யாகிய பாடினிக்கு அல்லது விறலிக்குப் பொன்னணிகலமும், பரிசிலாக அளித்துவந்தனர். விறலி விறல் (சத்துவம்) பட ஆடுபவள். விறல் உள்ளக் குறிப்பால் உடம்பில் தோன்றும் வேறுபாடு. அவை கண்ணீர் வார்தல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிநாட்டைப் பார்க்க வந்த மார்க்கோ போலோ என்னும் வெனீசுநகர வணிகர், சுந்தரபாண்டி யன் தன் கழுத்தில் விலைமதிக்க வொண்ணாத பன்மணி மாலையும், மார்பில் விலையேறப் பெற்ற இருமணியாரமும், தோளில் மூன்று பன்முத்தக் கடிகையும், காலிற் கழலும், கால் விரல்களில் மோதிரமும் அணிந்திருந்ததாகக் கூறியுள்ளார். "மைதீர் பசும்பொன் மாண்ட மணியழுத்திச் செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம் எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச் செய்தொழிலாற் காணப் படும்" (நாலடி.347) என்னும் நாலடிச் செய்யுளால், பண்டை மூவேந்தரின் செருப்பு எத்தகையதாயிருக்கும் என்பதை உய்த்துணரலாம். மயிலுக்குத் தோகைபோலப் பெண்டிர்க்குக் கூந்தல் அழகு தருவதால், அக்காலத்து பெண்டிர் தம் கூந்தலை நன்றாய்ப் பேணி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள், முடி என்னும் ஐவகையில் அழகுபெற முடித்து வந்தனர். அவை ஐம்பால் எனப்படும். அவற்றைக் குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என நச்சினார்க்கினியரும்; சுருள், குரல், அளகம், துஞ்சு, குழல், கொண்டை எனச் சாமுண்டி தேவநாயகரும்; சிறிது வேறுபடக் கூறுவர். கூந்தலுக்கு மணம் இயற்கை என்னும் அளவிற்கு நறுமணம் ஊட்டுவது ஒருதனிக் கலையாயிருந்தது. "நாறைங் கூந்தல்" என்றார் இளங்கோவடிகளும் (சிலப்.10: 43). பெண்டிர் தம் கண்ணிற்கு மையூட்டுவது பெரு வழக்கமா யிருந்தது. "எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து" (1285) என்னும் குறள் இதைத் தெரிவிக்கும். மையூட்டுவதன் பெருவழக் கினால், உண்கண் என்னுந் தொடரே மையுண்ட கண்ணைக் குறிக்கும். |