தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வளை), பரியகம் (பாசித் தாமணி, கைச்சரி), வால்வளை (சங்க வளை, வெள்ளிவளை), பவழ வளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணிமோதிரம், மரகதத் தாள் செறி (மரகதக் கடைசெறி), சங்கிலி (மறத்தொடரி), நுண்ஞாண், ஆரம்,கயிற்கடை யொழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக்கடிப் பிணை (நீலக்குதம்பை), தெய்வவுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பாளை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடு காதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகலம் அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று சூடை அல்லது சூடாமணி. பெண்டிர் அரைப் பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐவகைப்பட்டிருந்தது. "எண்கோவை காஞ்சி எழுகோவை மேகலை பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள் பருமம் பதினெட்டு முப்பத் திரண்டு விரிசிகை யென்றுணரற் பாற்று." என்பது பழஞ் செய்யுள். இக்கால அணிகளே ஏறத்தாழ ஐம்பது வகைப்பட்டிருப் பதால், முதன்மையான அணியினையே இளங்கோவடிகள் குறித் திருத்தல் வேண்டும். இக்காலத்து அரைப்பட்டிகை ஒட்டியாண மாகும். இங்ஙனமே சில அணிகள் வடிவும் பெயரும் மாறியுள. இக்காலத்துப் பாண்டிநாட்டுப் பழ நாகரிக மகளிர்போல், அக்காலத்தில் எல்லாத் தமிழப் பெண்டிரும் காது வளர்த்திருந்தனர். காது வளர்க்கும்போது அணிவது குதம்பையும், வளர்த்தபின் அணிவது குழையும் கடிப்பிணையுமாகும். குதம்பை இன்று "கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்" (சிலப். 4:50) "வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளூன்வாடிய உணங்கல் போன்றன" (மணிமே. 20: 53-4) என்பன காண்க. அக்காலத்தில் ஆடவரும் அணிகலன் அணிவது பெருவழக்கு. வணிகர் காதிற் குண்டலமும் தோளில் (புயத்தில்) கடகமும், மார்பில் மணிக்கண்டிகையும், அணிந்திருந்தனர். பிற வகுப்பார் காதிற் கடுக்கனும், கையிற் காப்பும் அணிந்திருந்தனர். கடுக்கனைப் பின் பற்றியே பிற்காலக் கமலம் (கம்மல்) என்னும் மகளிர் காதணி எழுந்தது. மறவர் தோளிற் கடகமும் காலிற் கழலும் அணிந்திருந்தனர். கழல் |