பக்கம் எண் :

48பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
 கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
 நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை"
(அகம். 130:9-11)

"வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
 புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை
 அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து"
(அகம். 201:3-5)

"இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
 வலம்புரி மூழ்கிய வான்திமிற் பரதவர்
 ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனப்
 கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்"
(அகம். 350:10-13)

"காண்டொறுங் கலுழ்த லன்றியும் ஈண்டுநீர்
 முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை"
(நற். 23:5-6)

"தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்" (பட்டினப். 189)

அணிகலத்திற்குரிய பொன், இயற்கையாகத் தூயதும், புட மிடப்பட்டுத் தூயதாக்கப் பெற்றதும் என இருவகை. இவற்றுள் முன்னது ஓட்டற்ற பொன் எனப்படும்.

"ஓட்டற்ற செம்பொன் போலே" (ஈடு. 1:10:9)

"மாற்றறி யாத செழும்பசும் பொன்"

என்று இராமலிங்க அடிகள் கூறியதும் இதுவே.

   புடமிடப்பட்டது மாற்றுயர்ந்த பொன் எனப்படும். பத்தரை மாற்றுத் தங்கம் சிறந்ததெனக் கூறுவது உலகவழக்கு. தாயுமான அடிகள் இதைப் பத்துமாற்றுத் தங்கம் என்பர்.

"பத்துமாற்றுத் தங்க மாக்கியே பணிகொண்ட" (சின்மயா.7)

அபரஞ்சி என்னும் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னும் உள்ளதாக நூல்கள் கூறும்,


"ஆயிரத்தெட்டு மாற்றின் அபரஞ்சி " (மச்சபு.தாரகாசுரவ. 26)
"அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு"

என்றொரு பிற்காலப் பழமொழியும் உளது.

   பொன்னின் மாற்றுரைக்குங் கல் கட்டளைக்கல் என்றும், உரைக்கும் கம்பி உரையாணி என்றும் பெயர் பெற்றன.

   மாதவி, விரலணி (கான் மோதிரம்), பரியகம் (காற்சவடி), நூபுரம் (சிலம்பு), பாடகம், சதங்கை, அரியகம் (பாதசாலம்), குறங்குசெறி (கவான்செறி), விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை),