பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்47

   அரிசில்கிழார், தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறைமீது பதிற். 8ஆம் பத்தைப் பாடி, ஒன்பது நூறாயிரம் பொற்காசும் ஆட்சி யுரிமையை மறுத்து அமைச்சுரிமையும் பெற்றார்.
பெருங்குன்றூர்கிழார், குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை மீது பதிற். 9ஆம் பத்தைப் பாடி, முப்பத்தீராயிரம் பொற்காசும் பல்வகைப் பரிசிலும் பெற்றார்.

   கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகாற் பெருவளவன்மீது பட்டினப்பாலையைப் பாடி, பதினாறு நூறாயிரம் பொன் பெற்றார்.

   பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் 10ஆம் பத்தும் இன்றின் மையால்,அவற்றைப் பாடிய புலவர் பெற்ற பரிசும் தெரியவில்லை.

   மாதவிபோல் ஆடல்பாடல் அரங்கேறிய நாடகக் கணிகை யின் மாலை விலை ஆயிரத்தெண் கழஞ்சு பொன்னாக மதிக்கப்பட்டிருந்தது.

"கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
 நுண்வினைக் கொல்லர்"
(சிலப்.16:105-6)

"மத்தக மணியொடு வயிரம் கட்டிய
 பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூல்
 சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம்
 பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக்
 கோப்பெருந் தேவிக் கல்லதை யிச்சிலம்பு
 யாப்புற வில்லை யென" (சிலப். 16:17-22)
"பலவுறு கண்ணுள் சிலகோல் அவிர்தொடி"
(கலித். 85:7)

என்னும் பகுதிகள் அக்காலத்து அணிகல வினைத்திறத்தைக் காட்டும்.

"மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
 கடல்பயந்த கதிர்முத்தமும்"
(புறம். 377: 16-7)

என்பது தமிழகத்தின் பொன்மணி முத்து வளத்தைக் காட்டும்.
பாண்டிநாட்டைச் சேர்ந்த கீழைக்கடல் முத்து, தொன்று தொட்டு உலகப் புகழ் பெற்றது.

"விளைந்துமுதிர்ந்த வெண்முத்தின்
 இலங்குவளை இருஞ்சேரிக்
 கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
 நற்கொற்கையோர் நசைப்பொருந"
(மதுரைக்.135-8)

"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
 கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன"
(அகம். 27:8-9)