பக்கம் எண் :

56பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

இல்லற மல்லது நல்லற மன்று

எனச் சுருங்கச் சொன்னார் பிற்காலத்து ஒளவையார். ஆடவரும் பெண்டிரும் கூடாது வாழ்வது அரிதாயிருப்பதுடன், துறவறத்திற் கும் இல்லறமே இன்றியமையாத துணையாகின்றது.

   மேற்கூறிய மூவகை வாழ்க்கையுள், ஒவ்வொன்றும் நல்லதும் தீயதும் என இருதிறப்படும். இல்லறத்தில் ஒரே மனைவியுடன் வாழ்வது நல்லது; பல மனைவியருடன் அல்லது பல பெண்டிரைக் காதலித்து வாழ்வது தீயது. துறவறத்தில் உண்மையாயிருப்பது நல்லது; உள்ளொன்றும் புறம் ஒன்றுமா யிருப்பது தீயது; அது கூடா வொழுக்கம் எனப்படும். தனி வாழ்க்கையில் ஒரு பெண்ணையும் காதலியாதிருப்பது நல்லது; மறைவாய்க் காதலித் தொழுகுவது தீயது. இவற்றுள் நல்லவற்றையே தமிழ மேலோர் போற்றினர்.

   உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணையாயிருப்பதால் மனைவிக்கு வாழ்க்கைத் துணைவி என்று பெயர்.

இல்லறம்

   மணப்பருவம் வந்த பின்பே, பலவகையிலும் ஒத்த ஓர் இளைஞனும் இளைஞையும், தாமாகக் கூடியோ தம் பெற்றோராற் கூட்டப்பட்டோ, கணவனும் மனைவியுமாகி வாழ்வது, ஆரிய வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழ மரபு. மணமானமைக்கு அடையாளமாக மனைவியின் கழுத்தில் தாலி என்னும் மங்கலவணி இடம்பெறும்.

   கணவனும் மனைவியும் எங்ஙனம் கூடியிருப்பினும் அவர்க்கு இன்றியமையாததாகும். காதல் என்பது இறக்கும்வரையும் ஒருவரை யொருவர் இன்றியமையாமை. கணவன் மனைவியரிடைப்பட்ட காதல், காமம் என்னும் சிறப்புப் பெயர் பெறும். அச்சொல் இன்று பெண்ணாசை என்னும் தீயபொருளில் வழங்கிவருகின்றது.  

   காமத்தை ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனர் முன்னோர். ஓர் ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவர்மட்டும் காதலிப்பது ஒருதலைக் காமம்; இருவரும் காதலிப்பது இருதலைக் காமம்; யாரேனும் ஒருவர் நெறிதவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம். இவற்றுள் இருதலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப்பட்டதாகவும் கொள் ளப்பட்டது. பெற்றோரும் மற்றோருமின்றித் தாமாகக் கூடுவதெல் லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவே யிருக்கும்.

   காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும், பொருந்தாக் காமத்தைப் பெருந்திணை என்றும் இலக்