பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்55

தெண்கடற் குண்டகழிச்
சீர்சான்ற வுயர்நெல்லின்
ஊர்கொண்ட வுயர்கொற்றவ"
(75-88)

என்று மதுரைக்காஞ்சி, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் சாலி (சாவக)த் தீவைக் கைப்பற்றியதை, அவன் வழித்தோன்றலான தலையாலங்கானத்துச் செருவென்றநெடுஞ்செழியன்மீது ஏற்றிக் கூறுதல் காண்க.

"கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமும் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி யன்ன"
(புறம். 343:5-10)

என்பது வணிகம்பற்றியது.

"சாதுவன் என்போன் தகவில னாகி
......................................................
வங்கம் போகும் வணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி"
(மணிமே.16: 4-12)

என்பது, அயல் நாடு காணச் சென்றமை பற்றியது.

8. வாழ்க்கை வகை

   உலகவாழ்க்கை, இல்லறம் துறவறம் தனிவாழ்க்கை என மூவகைப்படும்.

   ஒரு கற்புடைப் பெண்ணை மணந்து இல்லத்திலிருந்து அறஞ் செய்து வாழும் வாழ்க்கை இல்லறமாகும். உலகப்பற்றை யொழித்து வீடுபேற்று முயற்சியில் ஈடுபடுவது துறவறமாகும். மணஞ்செய்யாது உலகப்பற்றோடு தனியா யிருப்பது தனிவாழ்க்கை
(Celibacy) ஆகும். இவற்றுள் இல்லறத்தையே சிறந்ததாகக் கொண்டனர் தமிழர். இறைவன் மக்களை ஆணும் பெண்ணுமாய் படைத்திருப்பதே, அவர் கூடி வாழ்தற் பொருட்டே. இல்லறத்தாலும் ஒருவர் வீடு பேற்றை அடையமுடியும்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்"
(குறள்.46)

"அறன்எனப் பட்டதே யில்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"
(குறள்.49)

என்றார் தமிழ் அறநூலாசிரியர் திருவள்ளுவர். இவற்றையே,