பக்கம் எண் :

நன்னூல் நன்னூலா? 15

-15-
 

3. நன்னூல் நன்னூலா?

 

    ககரவொலியை யொட்டிய ஆய்தம் தலையை இடமாகக் கொண்டு பிறக்குமென்றும் மெய்த்தன்மையுடைய அது அங்காத்தலால் தோன்று மென்றும் அவர் எங்ஙனம் அறிந்தனரோ அறிகிலம். ஒருகால் தொல் காப்பியர்க்கு முந்தியவராயோ தூய தமிழராயோ இருந்திருப்பின் அவர் கூற்றைக் கொள்ள ஒருசிறிது இடமுண்டு. அவர் ஆரியச் சார்பான பிராமணராதலாலும் 12ஆம் நூற்றாண்டினராதலாலும் தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்று இலக்கியவதிகாரி யாயினரேயன்றி, தமிழ் மொழிக்கும் ஒலிக்கும் அதிகாரியாயினரல்லர் என அறிக.

(3) மொழிமுத லெழுத்துகள்

    'ஆவோ டல்லது யகரமுத லாது' (65)

    என்றார் தொல்காப்பியர். இவ் வியல்பையே கழக (சங்க) இலக்கியத்திற் காண்கின்றோம். ஆயின், இதற்கு மாறாக,

    'அஆ உஊ ஓஒள யம்முதல்' (104)

    என விதித்துள்ளார் நன்னூலார். இதற்குக் காரணம், அவர் வடசொற்கட்குத் தமிழில் தாராளமாய் வழிவகுத்துள்ளதே.

    தொல்காப்பியர் ஙகரத்தை மொழிமுதலெழுத்தாகக் கொண்டிலர் ஆயின் நன்னூலார்,

    'ட்டியா வெகர வினாவழி யவ்வை
    ஒட்டி ஙவ்வு முதலா கும்மே' (106)

என நூற்பா யாத்தார்.

    ஙகரம் இற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமன்றி மூக்கொலி மிக்குள்ள மலையாள நாட்டிலும் ஒருவகை வழக்கிலும் வழங்குவதில்லை. ஙனம் என்னும் வடிவம் அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம் எனச் சுட்டெழுத்தையும் வினாவெழுத்தையும் ஒட்டியல்லது தனித்து வருவதில்லை. ''அவ்வகை'' ''எவ்வகை'' என்பன ''அந்தவகை'' ''எந்தவகை'' என்றும், ''அவ்வண்ணம்'' ''எவ்வண்ணம்'' என்பன ''அந்தவண்ணம்'' ''எந்தவண்ணம்'' என்றும், வழங்குவதுபோல் ''அங்ஙனம்'' ''எங்ஙனம்'' என்பன ''அந்த ஙனம்'' ''எந்த ஙனம்'' என்று  வழங்குவதை ஓரிடத்தும் காண்கின்றிலம். ஆகவே, ஙனம் என்னும் வடிவின் முதலெழுத்து மற்றோரெழுத்தின் திரிபாயே யிருத்தல் வேண்டும்.

    ஆங்கு ஈங்கு என்னும் சுட்டுச் சொற்களும், எங்கு, யாங்கு என்னும் வினாச் சொற்களும் ''அனம்'' என்னும் ஈற்றை யேற்று வருவது இயல்பு.  அவ் வீறேற்ற அச் சொற்களே குறுகியும் குறுகாதும் நின்று மூக்கொலிப்பாடு (Nasalization) பெறுங்கால் அவற்றிடையேயுள்ள ககரம் ஙகரமாகத் திரியும்.