பக்கம் எண் :

64மறுப்புரை மாண்பு

-64-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    சம்பான் என்பது (E.sampan) ஒருவகைக் சிறிய சீனப் படகு. அது பஃறி, திமில், தோணி, படகு என்பவற்றுள் ஒன்றுக்குச் சமமாகும். அது முப்பலகையாற் செய்யப்பட்டதினால் அப்பெயர் பெற்றது.  Chinese san -pan. san = மூன்று, pan= பலகை. ஆதலால், சம்பான் என்ற சொல்லே தமிழுக்குத் தேவையில்லை. மொழி யுணர்ச்சியுள்ளவர் மண்ணெண்ணெய், மிதிவண்டி என்று தூய தமிழ்ச்சொற்கள் வழங்கவும் மொழியுணர்ச்சியில்லார் கெரோசின் ஆயில், சைக்கிள் என்று ஆங்கிலச் சொற்களையே வழங்குவது போன்றதே, சம்பான் என்னும் சீனச் சொல்லை வேண்டாது வழங்குவதும் என்க. அதைப் படகு என்றே சொல்லலாம். சீனச்சொல்லை வழங்குவது தமிழுக்குக் கேடேயன்றி ஆக்கமன்று.

    காங்கு என்னும் சீனச்சொற்கு நேரானது வளந்து என்பது. யாழ்ப் பாண அகரமுதலியையும் சென்னைப் ப.க.க. அகரமுதலியையும் பார்க்க.

    பானை யொத்த கலங்களுள்; மிகச் சிறியது சுண்டான்; அதிற் பெரியது முட்டி; அதிற் பெரியது பானை; அதிற் பெரியது மிடா; அதிற் பெரியது வளந்து. அதுவே கலங்கிற்குச் சமமானது.

    மிகப் பெரிய தவளையை மிடாத்தவளை என்பர்.

    பீங்கான் என்பது சீனநாட்டினின்று வந்த ஒருவகைச் சுடுமட்கல மாகும். பீங்கான் என்னும் சொல் பிங்கான் (pingan) என்னும் பாரசீகச் சொல்லின் திரிபாக, சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியிற் குறிக்கப் பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுச் சுடுமட் கலங்களுள், சிவந்தவற்றைச் செஞ்சுள்ளை யென்றும், கரியவற்றைக் கருஞ்சுள்ளையென்றும், சொல்வது மரபு. பீங்கான் கலங்கள் பெரும்பாலும் வெண்ணிறமா யிருப்பதால் அவற்றை வெண் சுள்ளை என்னலாம். அக் கலங்களைச் சுள்ளாங்கலம் என்னலாம். சுடப் பட்ட கலம் என்பது அதன் பொருள். வெண்கலம் என்பது செய்பொருளாகு பெயராய் முறி என்னும் கருவியைக் குறிப்பது போன்றே, சுள்ளாங்கலம் என்பதும் செய்பொரு ளாகுபெயராய்ப் பீங்கான் கருவியைக் குறிப்பது பொருத்தமானதே.

    இனி, இற்றை நூல்களிற் பீங்கானைக் குறிக்கும் சொல்லின்மையால், பண்டை நூல்களிலும் இருந்திராது என்ற முடிவுக்கு வரமுடியாது.

     மணிலா(Manilla) என்னும் பிலிப்பைன் தீவுக்கணத் தலை நகரினின்று இறக்குமதியான கடலை வகையை, நிலக்கடலை, வேர்க்கடலை, கடலைக்காய்  என்று தனித்தமிழ்ப் பெயரால் வழங்குவதே தமிழ்நாட்டுப் பெருவழக்கு. ஆங்கிலேயரும் நிலக்கடலை என்னும் சொல்லையே groundnut என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆயினும், மணிலாக் கொட்டை என்ற பெயரையே சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி அளவையாகக் கொண்டுள்ளது. இதனால், தூய தமிழ்ச்சொற்களை இயன்ற வரை மறைத்து,