பக்கம் எண் :

மொழியதிகாரம்103

"நித்தல் விழாவணி நிகழ்வித்
தோனே"
(சிலப். உரைபெறு கட்டுரை)

     வினையொடு முடியின் உம்மை பெறவேண்டிய முற்றுப் பொருட்
சொற்கள், தம்மை யுணர்த்தும்போதும், கூட்டுச்சொல் லுறுப்பாகவும்
குறிப்புப் பெயரெச்சமாகவும் நிற்கும்போதும், உம்மை பெற
வேண்டுவதில்லை; தம்மையுணர்த்தும்போது பெறவே பெறா.

     எ-டு: "முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே" (தொல்.809).

     உலகமுழுதுடையாள், முழுதுலகு.

     "உமை நித்தலுங் கைதொழுவேன்" (தேவா. 825: 1).

     "நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து" (இறை.கள. 1: 14) என்பது செய்யுள்
     திரிபாகவோ வழுவமைதியாகவோ கொள்ளப்பெறும்.

     நித்தல்-நிச்சல்

     "நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய" (திவ்.திருவாய். 1: 9: 11).

     வடவர் காட்டும் மூலம் வருமாறு:

     நி (முன்னொட்டு) = கீழ், பின், இல், உள், உட்கு, உட்பெற.

     நி - ஜ (ஜன்) = உள்ளான, உடன்பிறந்த, சொந்த, தன்னின, தன்
     நாட்டிற்குரிய; அடிக்கடி நிகழ்கின்ற, தொடர்கின்ற.

     நி - நித்ய = உள்ளான, தன் நாட்டிற்குரிய; சொந்த; தொடர்கின்ற,
     நிலையான, என்றுமுள்ள.

     நி என்னும் வடமொழி முன்னொட்டு, இல் (E, in) என்னும் தமிழ்
     இடவேற்றுமை யுருபின் முறைமாற்றுத் திரிபே.

     இல்-இன்-நி. ஒ. நோ: அல்-அன் (E. an, un) - ந (வ.).

     ந என்னும் வடமொழி எதிர்மறை முன்னொட்டை மூலச் சொல்லாகக்
கொண்டு, அதுவே அந் என்று பிரிந்ததாகத் தலைகீழாய்க் கூறுவர் வடவர்.

     என்று முண்மைப்பொருட் சொல்லிற்கு மூலமாக இருக்கக் கூடியது,
நில் என்னும் தென்சொல்லா, நி என்னும் வடமொழி முன்னொட்டா என்று,
நடுநிலையறிஞர் ஆய்ந்து தெளிக.

பருவம்-பர்வன் (இ.வே.)

     பரு-பருவு-பருவம்=காய்கனி முதலியன பருத்துள்ள நிலை, தக்கநிலை,
தக்க காலம், ஒவ்வொன்றிற்குத் தக்க வெவ்வெறு காலப்பகுதி,
பெரும்பொழுது.

     வளர்ச்சியடைந்த மக்களையும் பூப்படைந்த மகளிரையும் பருவம்
வந்தோர் என்றும், பருத்து உடையும் நிலையிலிருக்கும் சிலந்தியைப்
பருவச் சிலந்தியென்றும், கூறும் வழக்கை நோக்குக.