பக்கம் எண் :

104வடமொழி வரலாறு

     வடவர் காட்டும் மூலமும் பொருள் வரிசையும் வருமாறு:

     ப்ரீ=நிரப்பு, நிறைவாக்கு, நிரம்பக் கொடு (இ. வே.); நிறை வேற்று,
     முற்றுஞ் செலவிடு, முற்றும்வளை, மூடு (அ.வே.).

     பரு = கைகால், உறுப்பு; மலை, கடல், வானம், விண்ணுலகு.

     பருஸ்=கணு, முடிச்சு; உறுப்பு, பகுதி (இ. வே.). மா. வி. அ.

     "a joint or knot (esp. of a cane or reed, orig. 'fullness',
     i.e. the full or thick part of the stalk" என்று குறித்திருப்பதைக்      கூர்ந்து நோக்குக.

     பர்வன் = கணு. முடிச்சு, உறுப்பு (இ. வே.); பிளவு, இடையீடு, பிரிவு,
     பகுதி (ச. பி.); ஒரு கூட்டின் உறுப்பு (பிராதி. நிரு.); ஒரு குறித்த
     காலப்பகுதி (இ. வே.).

     இது மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுவதா
யிருத்தலைக் காண்க.

பத்தி-பக்தி (bh)

     பகு-பஜ் (bh). பக்தன்-பக்த (bh). இங்ஙனம் பகு, பத்தன், பத்தி
என்னும் தென்சொற்களும், பஜ், பக்த, பக்தி என்னும் வடசொற்களும்,
ஒரே மூலத்தினின்று தோன்றியிருப்பதால், வடசொற்கட்குக் காட்டிய
மொழிப்பொருட் காரணமே தென்சொற்கும் ஒக்கும் என அறிக.

     பக்த=பகுக்கப் பெற்றது, பகுதியானது, பாற்பட்டது, பாற்பட்ட வன்,
     பற்றுள்ளவன், போற்றுபவன், வணங்குபவன், வழிபடுபவன், அடியான்
     (மா.வி.அ.)

     பக்தி=பகுக்கப் பெற்றமை, பகுதியானமை, பாற்பட்டமை, போற்றுகை,
     வணங்குகை, வழிபடுகை, தேவடிமை (மா.வி.அ.).

     பத்தி என்னும் சொல்லின் வடிவ வரலாற்றையும், அதன்
     பொதுப்பொருளையும், பகு என்னும் சொல்லின்கீழ்க் காண்க.

     பற்று என்பது இருதிணைப் பொருள்கள்மீது முள்ள அழுந்திய
ஆசையையே குறிக்கும்; பத்தி என்பது இறைவனிடத்தும் தலைவ னிடத்துங்
கொண்ட அச்சத்தொடு கூடிய உண்மையான பணி வன்பையே குறிக்கும்.

(3) ஐயுறவிற் கிடமானவை

கலியாணம்-கல்யாண (இ.வே.)

     கலித்தல்=ஆரவாரித்தல், மிக்கெழுதல், பெருகுதல், செருக் குதல்,
தருக்குதல், செருக்கி வளர்தல். தழைத்தல், மகிழ்தல்.

     கலி=ஆரவாரம், பெருக்கு, செருக்கு, தழைத்தல், மகிழ்ச்சி.

     யாணம் = அழகு.