பக்கம் எண் :

மொழியதிகாரம்105

"யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்"
(தொல். 1446)

     ஏண்-ஏணம் (எழுச்சி, அழகு)-யாணம்=அழகு.

     யாணம்-யாணர்=புதுமை, புதுவருவாய்.

     "கலியாணர்"=மனச்செருக்கு எழுதற்குக் காரணமான புது வருவாய்'
     (பட்டினப். 32).

     "கலியாணர்" = ஓசையையுடைய புதுப்பெயல் (புறம். 205).

     "கலியாணர்" = செருக்கினை யுடைத்தாகிய புதுவருவாய் (மதுரைக். 330).

     "கலியாணர்"-பெருக்கினை யுடைத்தாகிய புது வருவாய் (மதுரைக். 118)

     யாணர் என்பது யாணம் என்பதன் திரிபாதலின், கலியாணம் என்பதே
முன்னை வடிவாம்.

     கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற (இ. வே.),
சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான
என்னும் பொருள்களும், அதன் கல்யாணம் என்னும் வடிவிற்கு ஆகூழ்,
மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும்
பொருள்களும் கூறப்பட்டிருப்பதால், அது கலியாணம் என்னும்
தென்சொல்லின் திரிபோ என ஐயுறக் கிடக்கின்றது.

     அதன் மூலமாகக் காட்டும் கல்ய என்னும் சொற்கு நல்ல, நலமான
என்னும் பொருள்களும், அதன் கல்யம் என்னும் வடிவிற்கு உடல்நலம்
என்னும் பொருளும் கூறப்பட்டுள. ஆயினும், இச் சொல் கல்யாண என்பதன்
சிதைவாகவு மிருக்கலாம். யாண என்னும் பிற்பகுதியை ஈறாகக் கொள்ளாது
கிளவியாகக் கொள்வதே பொருத்தமாம்.

     வடசொல்லாகக் கருதப்படும் கல்யாணம் என்னும் சொற்கு
உலகவழக்குத் தமிழில் திருமணம் என்னும் பொருளுண்டு; வடமொழியில்
அஃதில்லை. மங்கலம் என்னும் பொருளே இரு மொழிக்கும் பொதுவாம்.
ஆகவே, திருமணப் பொருள் தென் னாட்டிலேயே வடசொற்குக்
கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். மங்கலம் என்னுஞ் சொல் வடமொழியில்
நன்மை என்று பொருள்படுமே யன்றித் திருமணத்தைக் குறிக்காது.
கல்யாண குணம் = நல்ல பண்பு. கலி என்னும் சொல் இசைக்கருவி
முழக்கத்தையும்; யாணம் என்னுஞ் சொல் பந்தற் சுவடிப்பும் மணமக்கள்
கோலமுமாகிய அழகையும், வரிசை வைத்தலும் மொய்