பக்கம் எண் :

இலக்கியவதிகாரம்149

     தமிழ முனிவர் முற்றத் துறந்தவர்; ஆணவம் அற்றவர்;

"பேய்போற் றிரிந்து பிணம்போற் கிடந்திட்ட
பிச்சையெல்லாம்
நாய்போ லருந்தி நரிபோ லுழன்றுநன் மங்கையரைத்
தாய்போற் கருதித் தமர்போ லெவருக்குந் தாழ்மைசொலிச்
சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெரிந்தவரே."
 
"காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தைசுற்றி
ஓடே யெடுத்தென்ன உள்ளன் பிலாதவ ரோங்குவிண்ணோர்
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே’’

     என்னும் பட்டினத்தடிகள் பாட்டிற் கிலக்கானவர்.

     வேதப் பிராமண முனிவரோ, தம்மைப் பிறப்பி லுயர்ந்தவ ரென்றும்
வீடுபேறும் அதற்கு வாயிலான துறவும் பிராமணர்க்கே உரியன வென்றும்
கருதி, ஆணவம் என்னும் குன்றேறி நின்று, காம விருப்பம் நீங்கும்வரை
மனைவியொடு கூடிவாழ்ந்தவர். ஆதலால், அவர் உண்மையான
துறவியருமல்லர்; துறவு முதிர்ச்சியால் மெய்ப்பொருள் கண்டவருமல்லார்.
ஆரணியகத்திற்குப்பின், எழுந்த உபநிடதம் (உபநிஷத்) என்னும்
மெய்ப்பொருள் நூல்களெல்லாம், ஓத்துகள் என்னும் தமிழ்நூல்களின்
மொழிபெயர்ப்பே.

"உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான"
(977)

     என்பது தொல்காப்பியம்.

     உபநிஷத் என்னும் வடசொல் உப+நி+ஸத் என்று பிரியும். உப =
உடன், அருகு. நி = கீழ் . ஸத் = குந்து. ஆகவே, உபநிஷத் என்னும்
சொற்கு அருகடியமர்தல் என்பது திரண்ட பொருள்; ஆசிரியன் கீழிருந்து
மெய்ப்பொருள் கற்றல் என்பது விரிந்த பொருள். ஆயின், பரமவோதியால்
அறியாமையை அடக்குதல் என்பது ஆரியர் கூறும் விளக்கப் பொருள்.
("Setting at rest ignorance by revealing the knowledge of the
Supreme Spirit").

     வேத முனிவர் காட்டில் வதிந்ததினால், கடவுளைப்பற்றிய
வுண்மைகளைத் தாமே கண்டறிந்ததுபோற் காட்டிக்கொண்டனர். அவர்
முனிந்ததெல்லாம் தமிழையும் தமிழனையும் தமிழப் பண்பாட்டையுமே.
முனிதல் வெறுத்தல். முனிந்தவன் முனிவன்.

     உபநிடதங்கள் 108 என்பர்.

2. வேதாங்கம்

     வேதத்திற்கு உறுப்பாகச் சொல்லப்படும் சிட்சை, நிருத்தம், சந்தசு,
சோதிடம், கற்பம், வியாகரணம்
என்னும் அறுவகை நூல்கள்,
வேதத்திற்குப் பின் முறையே, வெவ்வேறு காலத்தெழுந்தன.