பக்கம் எண் :

150வடமொழி வரலாறு

     சிட்சை (சிக்ஷா) என்பது வேத ஒலியிலக்கணம். அது சாகைதொறும்
தனிப்பட இருந்ததினால் பிராதிசாக்கியம் (பிராதிசாக்ய) எனப்பட்டது.
அதற்கு மூலம் தமிழிலக்கணமே.

     நிருத்தம் (நிருக்த) என்பது வேதச் சொற்பொருள் கூறுவது.

     சந்தசு (சந்தஸ்) என்பது வேத மந்திரச் செய்யுளிலக்கணங் கூறுவது.
அச் செய்யுள்கள் ஓரடிமுதல் எட்டடிவரைப் பட்டு, காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், ப்ருகதீ, பங்க்தீ, த்ரிஷ்டுப், ஜகதீ முதலிய பலபெயர்
கொண்டவை.

     சோதிடம் (ஜ்யௌதிஷ) என்பது வேள்வியியற்றற்குரிய நாள்
கோள் நிலை கூறும் கணியநூல். அதற்கு மூலம் தமிழ்க் கணியமே.

     கற்பம் (கல்ப) என்பது, இம்மை மறுமைக்குரிய இருவகைச்
சடங்குகளையும் ஒழுக்கத்தையும் வகுத்துக் கூறுவது. அது, வேத
வேள்விபற்றிய சிரௌதசூத்திரம் (ச்ரௌத ஸூத்ர), இல்ல வேள்வி
பற்றிய கிருகிய சூத்திரம் (க்ருஹ்ய ஸூத்ர), நால்வகை வரண ஒழுக்க
வேறுபாடுபற்றிய தரும சூத்திரம் (தர்ம ஸூத்ர) என மூவகைப்படும்.
இவற்றுள் தமிழரையும் திரவிடரையும் அடிமைப்படுத்திப் பிராமணரை
நிலத்தேவராக உயர்த்திய வகை, வரணாசிரம தருமங் கூறும் தரும
சாத்திரமே.

     வியாகரணம் என்பது, வேதச் சொல்லையும் பொதுச் சொல்லையும்
ஆராய்ந்து, நன்னூல்போல் எழுத்தும் சொல்லும் சொற்றொடரும்பற்றிக்
கூறும் இலக்கண நூல்.

     வேதக் காலத்திலேயே முதன்முதல் தோன்றிய சமற்கிருத
இலக்கணம் ஐந்திரம். அது தமிழகத்திலேயே தோன்றியதாகத்
தெரிகின்றது. அதன் காலம் தோரா. கி. மு. 1200. சமற்கிருத
இலக்கணங்களுள் தலைசிறந்தது பாணினியாரின் அஷ்டாத்யாயீ.
அதற்குமுன் 64 இலக்கணங்கள் வடமொழியில் தோன்றியதாக மாக்கசு
முல்லர் கூறுவர். வண்ணமாலை, புணரியல், வேற்றுமை யமைப்பு
ஆகிய மூன்றும், வடமொழி யிலக்கணங்களின் தமிழ் மூலத்தைக்
காட்டும்.

3. வேதசாத்திரம்

     வேதத் தொடர்புள்ளனவாகச் சொல்லப்படும் அறுவகை நூல்கள்
மீமாம்சை, வேதாந்தம், வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம்
என்பன.

     மீமாம்சை வேதத்தின் முற்பகுதியை ஆராய்வது, அதனால் பூர்வ
மீமாம்சை எனப்படுவது. இதை இயற்றியவர் ஜைமினியார்.