|
முல்2 (முன்மைக் கருத்துவேர்) |
தோற்றக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட இளமைக்கருத்து வேர்ச்சொல்லின் உடனிலைக் கருத்துகள், சிறுமை மென்மை அழகு மறம் வலிமை என்பன என்பது, முந்திய கட்டுரையிற் குறிக்கப்பட்டது. |
தோற்றமும் இளமையும் ஓருயிரியின் வாழ்க்கையில் முற்பட்ட நிலைகளாதலாலும்,தோற்றமென்பது ஒன்று இன்னொன்றினின்று முன் வருதலாதலாலும், தோற்றக் கருத்தின் வழிநிலைக் கருத்து முன்மை யென்பது அறியப்படும். |
முன்மை யென்பது காலமுன் இடமுன் என இரு திறப்படும். கால முன்மை முதன்மையையும் முதுமையையும் குறிக்கும். முதுமை முதிர்ச்சியில் முற்றும். |
முல்-மூல்-மூலம் = 1. விதையினின்று முன்தோன்றும் முளை. 2. முளையின் மாற்றமாகிய வேர். 3. திரண்ட வேராகிய கிழங்கு (பிங்.). "முதிர்கனி மூல முனிக்கண மறுப்ப" (கல்லா. 38). 4. வேரை யொட்டிய அடிமரம். "போதி மூலம் பொருந்தி" (மணிமே. 26 : 47). 5. அடிப்படை. 6. முதல்(ஆதி). "மூலவோலை மாட்சியிற் காட்ட" (பெரியபு. தடுத். 56). 7. ஐம்பூத முதனிலை(மூலப் பிரகிருதி). "மூலமு மறனும்........கனலும்" (பரிபா. 13 : 24). 8. கரணியம்(காரணம்). "மூல மாகிய மும்மலம்" (திருவாச. 2 : 111). 9. அடிமல மாகிய ஆணவம். "மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய்" (தேவா. 845 : 9). 10. அடிவாயாகிய அண்டி. 11. அண்டியில் முளைபோல் தோன்றும் நோய் (அக. நி.) |
மூலம் - வ. மூல. |
மூல்-மூலி = 1. மருந்தாக வுதவும் வேருடைய புல் பூண்டு செடி கொடி. "பாதாள மூலி படருமே" (நல்வழி, 23). 2. மருந்துவேர். 3. கரணிய முதல்வன். |
மூலி-வ. மூலின். |
மூலி-மூலிகை = மருந்துவேர் (w.). 2. மருந்து வேர்ச்செடி. |
மூலிகை-வ. மூலிகா. |
முல்-முன் = 1. முதல் (பிங்.). 2. காலமுன். "பின்றூங்கி முன்னெழூஉம் பேதையே" (தனிப்பா.), "யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" (பழ.). 3. இடமுன். "என்னைமுன் நில்லன்முன் தெவ்விர்" (குறள். |