|
1. முன்னிலையில். "தலையில் வணங்கவு மாங்கொலோ தையலார் முன்பே" (திவ். திருவாய். 5 : 3 : 7). 2. முன்காலத்தில். "முன்புநின் றம்பி வந்து சரண்புக" (கம்பரா. வாலிவதை. 117). |
முன்-முன்று-முன்றில் = வீட்டின் முன்னிடம். "பலவின் சுளையுடை |
முன்றில்" (நற். 77). தெ. முங்கிலி. |
முன்றில் - முற்றில் - முற்றம்(முன்றகம் - முன்றம் - முற்றம்(?)) = 1. வீட்டு முற்றம். "மணன்மலி முற்றம் புக்க சான்றோர்" (புறம். 178). 2. ஊர் முற்றம். "வஞ்சி முற்றம் வயக்கள னாக" (புறம். 373). 3. பரப்பு. "ஏந்து முலைமுற்றம் வீங்க" (அகம். 51). |
முன்று - முந்து, முந்துதல் = 1. முற்படுதல். "முதுவருள் முந்து கிளவாச் செறிவு." (குறள். 715). 2. எதிர்ப்படுதல். "முந்தின னருமறைக் கிழவன்" (கம்பரா. தாடகை. 28). 3. விரைதல். "முந்தா நின்ற வேட்கை" ("ஞானவா. சுக்கி. 7). 4. மேலெழுதல். "உந்தி முதலா முந்துவளி தோன்றி" (தொல். எழுத்து. 83). 5. முதன்மையாதல். "அவையின் முந்தி யிருப்பச் செயல்" (குறள். 67). 6. சிறத்தல். 7. பழமையாதல். க. முந்து. |
முந்து = 1. முற்காலம். "முந்துறை சனகனாதி" (கந்தபு. மேரு. 10). 2. முன்பு. 3. தொடக்கம்(ஆதி). "முந்து நடுவு முடிவு மாகிய" (திருவாச. 18 : 5). |
முந்து - முந்தன் = கடவுள். "முந்தனை யான்மா வென்றும்" (சி.சி. 4: 28). |
முந்துநூல் = முன்னூல். "முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி" (தொல். சிறப்புப்.). |
முந்தி = (பெ.) 1. முன்னிடம். 2. முன்றானை. "பொதுமாதர் முந்தியே தொடுமிடங்கள்" (குற்றா. தல. மந்தமா. 21). |
3. (கு. வி.எ.) முற்காலம். "முந்திவா னோர்கள் வந்து" (தேவா. 477 : 8). |
முந்து - முந்தை = (பெ.) 1. முற்காலம். "முந்தைத்தான் கேட்ட வாறே" (சீவக. 545). 2. பழைமை (பிங்.). 3. முன்னோன். |
"தந்தையாயென் றிவர்க்கு... முந்தைவழி நின்று" (பு.வெ. 9 : 33). 4.(கு.வி.எ.) குவி "வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்" (புறம். 10). |
முந்தை-முத்தை = முன்னிடம். "முத்தை வரூஉங் காலந் தோன்றின்" (தொல். எழுத்து. 164). க. முந்தெ. |
முந்திசினோர்-முன்னோர். "இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே" (பதிற். 69 : 17). |
முந்தி + ஈயினோர் = முந்தியீயினோர்-முந்தீயினோர் - முந்தீசினோர் - முந்திசினோர். |
ஈதல் = இடுதல். 'ஈ' ஒரு துணைவினை. |
ஒ.நோ: வந்து + இடு = வந்திடு = வந்துவிடு. உரைத்து + இடு = உரைத்திடு. |