பக்கம் எண் :

முல்3 (மென்மைக் கருத்துவேர்)23

     மெலியவன் = வலியற்றவன். "மெலியவர் பால தேயோ வொழுக்கமும் விழுப்பந் தானும்" (கம்பரா. வாலிவதை. 80).
     மெலியார் = வலியற்றவர். "மெலியார்மேன் மேக பகை" (குறள். 861).
     மெலிகோல் = கொடுங்கோல். "மெலிகோல் செய்தே னாகுக" (புறம். 71).
     மெல்-மெலு = எடைக் குறைவான காசு (W.).
     மெலு-மெலுக்கு = மென்மை (W.).
     மெலுக்கு-மெலுக்குவை = மென்மை (W.). தெ. மெலக்குவ.
     மெலு-மெது. ல-த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை-சதங்கை, கலம்பம்-கதம்பம்.
     மெது = 1. மென்மை 2. வேகமின்மை 3. அமைதி (W.). 4.மந்தம். 5.மழுக்கம்.
     க. மெது. வ. ம்ருது.
     ஒ.நோ: E. smooth. OE. smooth (once usu. smethe, whence dial. smeeth).
     நாகம் என்னும் தமிழ்ச்சொல் snake என்று செருமானிய மொழிகளில் சகர முதன்மிகையொடு வழங்குவது போன்றே, மெது வென்னும் சொல்லும் வழங்குகின்ற தென்க.
     தமிழ்ச்சொற்களின் மகரவுறுப்பின்பின் ரகரத்தை இடைச் செருகுவது சமற்கிருத இயல்பே.
     எ-டு: அமுது(சோறு)-அம்ருத, மடி-மரி-ம்ரு, மிதி-ம்ருத்.
     சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலியில், ம்ருது என்னும் சமற்கிருதச் சொல்லினின்று மெது என்னும் தென்சொல் திரிந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
     மெது மெதுத்தல் = மெதுவாயிருத்தல் (W.).
     மெதுமெதுப்பு = மெதுத்தன்மை (W.).
     மெது-மெதுக்கு = சோறு (W.). தெ. மெதுக்கு.
     அரிசி அவிந்தபின் மெதுவாயிருத்தல் காண்க.
     மெதுக்கிடுதல் = மெதுவாயிருத்தல்.
     மெதுகு = மென்மை. மெதுகரம் = நுண்ணிய வேலைப்பாட்டில் மெதுவாக அராவும் சன்ன அரம்.
     மெதுகாணி (மெதுகு + ஆணி) = மெருகிடும் ஒரு கருவி.
     மெதுவடை = மெதுவாயிருக்கும் உழுந்து வடை.
     மெது-மெத்து-மெத்தென = மெதுவாக.
     மெத்தெனல் = 1. மென்மைக்குறிப்பு. "மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி" (திவ். திருப்பா. 19). 2. அமைதிக்குறிப்பு. 3. காலத் தாழ்ச்சிக் குறிப்பு.