பக்கம் எண் :

முல்3 (மென்மைக் கருத்துவேர்)25

     மெல்கு-மெழுகு = 1. மெதுத்தன்மை. (அழகர்கல. 10). 2. இளகிய அல்லது களிப்பதமான மருந்து. 3. அரக்கு. "மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி" (குறுந். 155). 4. ஆவின் சாணம். "துய்ய மெழுகுடன்" (திருமந். 1720). 5. சந்தனம்.
     மெழுகு செய்தல் = மெதுவாக்குதல். "புரவி கருவிகொ டுரிஞ்சிமிக மெழுகு செய்து" (அழகர்கல. 10).
     மெழுகுதல் = 1. மேனியிற் சந்தனம் பூசுதல். "முகிண்முலை மெழுகிய சாந்தின்" (கம்பரா. பிணிவீ. 53). 2. நிலத்தைச் சாணமிட்டுத் துப்புரவு செய்தல். "நின்றிருக் கோயி றூகேன் மெழுகேன்" (திருவாச. 5 : 14). 3. குற்றத்தை மறைத்துப் பேசிவிடுதல்.
     மெழுகு-மெழுக்கு = 1. சாணத்தால் மெழுகுகை. "புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டு" (தேவா. 727 : 3). 2. சாணம். "திருவலகும் திருமெழுக்கும் தோண்டியுங் கொண்டு" (பெரியபு. திருநாவுக். 68). 3. மேற் பூச்சுப் பொருள். "வேரியின் மெழுக்கார்த்த மென்பூ நிலத்து" (சீவக. 129). 4. அரக்கு. 5. பிசின்.
     ம. மெழுக்கு.
     மெழுக்கு-மெழுக்கம் = சாணத்தால் மெழுகிய இடம். "மலரணி மெழுக்க மேறி" (பட்டினப். 248).
     மெழுக்குத்துணி = 1. மெழுகு பூசின துணி. 2. நீர்க்காப்புத்துணி. 3. நிலக்கரி நெய்யிட்ட போர்வை(Tarpaulin).
     மெழுக்கூட்டுதல் = மேற்பூச்சிடுதல்.
     மெழுகிடுதல் = 1. நூலின்மேல் மெழுகு பூசுதல். 2. சாணமிட்டு நிலத்தை அல்லது திண்ணையைத் துப்புரவு செய்தல். 3. படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல்.
     மெழுகுக்களிம்பு = சிரங்கிற்கிடும் களிம்பு மருந்துவகை.
     மெழுகு கட்டுதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல்.
     மெழுகு கட்டி வார்த்தல் = மெழுகு கருவில் உருக்கின மாழைகளை (உலோகங்களை) வார்த்துப் படிமை யமைத்தல்.
     மெழுகு சாணை = 1. மெழுகால் துடைத்த உரைகல். 2. மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக் கல் (W.).
     மெழுகு சாத்துதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல்.   "சிற்பர்களான் மெழுகு சாத்தி" (திருவாலவா. 45 : 2).
     மெழுகு சீலை = மெழுக்குத் துணி.
     மெழுகு சேர்வை = மெழுகுக் களிம்பு (W.).
     மெழுகுத்தண்டு = மெழுகுத் திரி (யாழ். அக.).