பக்கம் எண் :

குடியாட்சி101

கட்சிகள் பிளவுபட்டு அடிக்கடி எது எக்கட்சி என்று கூறமுடியாத நிலைகள் ஏற்பட்டன.

   ஆங்கில நாட்டுத் தலைவர்களுள் துணிவுமிக்கவராகிய டிஸ்ரேய்லி இடைத்தர வகுப்பார், புதிய தொழிலாளி வகுப்பினர் ஆகியவர் உள்ளுறக் கொந்தளிப்புடையராகி வருவதை உணர்ந்து ‘வெப்பத்திற்குச் சரியான மாற்று வெப்பமே’ எனக்கொண்டு தம் கட்சியினரும் எதிர் கட்சியினருமே வெருட்சியடையத் தக்க முற்போக்குடைய ஒரு புதிய சீர்திருத்தச் சட்டத்தை 1867-ல் கொண்டுவந்தார். இதன்படி, நகர்த்தொகுதிகளில் எத்தகைய உடைமை வரையறையும் இல்லாமல் வீடு உடையவர் யாவருக்கும் மொழியுரிமை தரப்பட்டது. ஆயினும் அயர்லாந்தில் மட்டும் 4 பொன் வரிவரையறை இவ்வகையில் செய்யப்பட்டது. தற்காலிகமாக வீடுகளில் தங்குபவர்கள் கூட 100 பொன் வாடகை கொடுப்பவர்களானால் மொழிக்கு உரியவராயினர். மாவட்டப் புறங்களில் ஆண்டுக்குப் 12 பொன் வாடகை செலுத்துவார்கள் அனைவரும் மொழி உரிமை பெற்றனர். இங்ஙனம் 1832-ம் ஆண்டுச் சட்டம் நகரின் இடைத்தர வகுப்பாருக்குத் தந்த உரிமைகளை 1867-ம் ஆண்டுச் சட்டம் நகரின் உழைப்பு வகுப்பினர்க்கும் தந்தது. இங்ஙனம் அரசியலில் தொழிலாளர் இடம்பெற்றதன் விளைவாகவே இதற்குப் பிற்பட்ட சட்ட அமைப்புகளிற்பலவும் தொழிற் சங்கம் நிறுவுதல் முதலிய தொழிலாளர்க்கான திட்டங்களுக்கு அடிகோலுபவையாயிருந்தன.

   1872-ல் மந்திரக்காரர்கேட்ட மறைவான மொழித் தரவுரிமை வழங்கப்பட்டது. இச் சட்டத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது.