பக்கம் எண் :

மொழி91

     "இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியி னடியாகவே தோன்றின" வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியரும் இத்துணிபினர்போலும். இது, வடமொழி அப்பைய தீக்கதரவர்களுக்கும் உடன்பாடாதல், அவரது சித்திர மீமாஞ்சைக் கூற்றான் விளங்கும். தமிழ் மொழியின் வரலாறு.
"உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதயம்
நீப்பறு மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே"
     "ஆயினும் உலகில் வழங்கும் மொழிகளெல்லாவற்றிலும் உவமையொன்றே அடிபட்டு நடந்தியல்வது வெள்ளிடை விலங்கலாம். ஏனைய அவ்வொன்றில் நின்றே கிளைப்பன. இதுபற்றி யன்றோ தொல்காப்பியனாரும் உவமவியலொன்றே கூறிப் போந்தார்" (தமிழ்-செல்வக் கேசவராய முதலியார்.)

2. பொருள்

     பொருட் பகுதியில் அகம் புறம் என்னும் இரண்டொழுக்கங்களின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. அக்காலத்து ஆண் பெண் என்னும் இருபான் மக்களின் மணமுறைகளையும் அவர் இல்லற வொழுக்கங்களையும் கூறுவது அகம். அக்காலத்து அரசர் செய்த போர் முறைகளையும் அவர்களது பிற ஒழுக்கங்களையும் கூறுவது புறம். ஆகவே, பொருளதிகாரம் பழந் தமிழ் மக்களின் வரலாறாக வமைந்துள்ளது. பொருளிலக்கணத்திற் காணப்படும் பொருள்கள் வடமொழியில் என்றென்றைக்கும் கிடைக்கக் கூடாத தனித் தமிழ்க் கருத்துக்களாகும்
"தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலர்
கொள்ளாரிக் குன்று பயன்"

(பரிபாடல்)

"இலைப்புறங் கண்டகண்ணி யின்றமி ழியற்கையின்பம்"