பக்கம் எண் :

10  
 
மேல்தொடரே இவ்விரு வளங்களையும் மிகுதியாகத் தருகிறது. மேல்கரைக்கு இது 195
செ.மீ.க்கு மேற்பட்ட மழையைத் தருகிறது. மற்றப் பெரும் பகுதிக்கு அது கோதாவரி,
கிருஷ்ணா, வடபெண்ணை, பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, தன்பொருநை
(தாமிரவருணி) ஆகிய பேராறுகளை வழங்கியுள்ளது. அத்துடன் அது மேல்கரைக்குப்
பல சிறு கானாறுகளையும் பொன்னானி, பெரியாறு போன்ற பெரிய ஆறுகளையும்
தருகிறது. விந்தியா, சாத்பூரா மலைகள் நருமதை, தபதி, மகாநதி முதலிய ஆறுகளை
வழங்குகின்றன.
 
     மேல்தொடரும், விந்திய மலையும், மற்ற மலைகளும் மிகுந்த காட்டு வளம்
உடையன. மேல் தொடரிலுள்ள சந்தனமும் தேக்கும், பண்டு முதல் இன்றுவரை
இந்நாட்டுக்கே உரிய தனிச் செல்வங்கள் ஆகும். தோதகத்தி, கருங்காலி, ஈட்டி,
தேயிலை, காப்பி, இரப்பர், சிங்கொனா, தேன், அரக்கு, யானைத் தந்தம் ஆகிய மலை
வளங்களும் இதில் மிகுதி.
 
புதை பொருட் செல்வம்
 
     தென்னாடு புதைபொருட் செல்வங்களை மிகுதியாக உடையது. தங்கம், செம்பு,
இரும்பு ஆகிய உலோகங்களும், நிலக்கரி, அப்பிரகம், மானோசைட் ஆகியவைகளும்,
கண்ணாடிக்குரிய களிமண், பாண்டங்களுக்குரிய பசுமண் பசைமண் (சிமிட்டி), கற்பலகை
ஏடுகள், சுண்ணாம்பினக் கற்கள், கட்டடக் கற்கள், பாதை செப்பனிடும் கற்கள்
ஆகியவையும், வைரம் முதலிய ஒளிக் கற்களும் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன.
இவற்றுள் பல, உலகில் வேறெங்கும் அகப்படாத தென்னாட்டுத் தனிச் செல்வங்கள்
ஆகும்.
 
     நாட்டின் தொழிலாற்றலைப் பெருக்குவதற்கு உயிர்நிலைப் பொருள்களான
இரும்பும் நிலக்கரியும் மேட்டு நிலங்களில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்குக் கரையில் தென்