தெரியாமலே அவன் அரண்மனையாகிய திருமலை நாயக்கன் மகாலின் பெரும் பகுதியைத் தமிழகம் அழிய விட்டுவிட்டது. ஆனால் எஞ்சிய சிறு பகுதியே அதன் புகழை இன்று உலகெல்லாம் பரப்பப் போதியது. அவன் கட்டிய பெரிய வண்டியூர்த் தெப்பக்குளமும், நாயக்க மன்னர் பலர் திருவுருவங்களடங்கிய புது மண்டபமும் அவன் காலச் சிற்பத் திறமைக்குச் சான்றுகளே. ஆனால் அவன் பேரவாவை மதுரையிலும் மற்றும் பல நகரங்களில் முடிவு பெறாது விடப்பட்ட நிலையில் உள்ள இராஜ கோபுரங்களே காட்டவல்லன. அவை எகிப்திய மோட்டுக் கோபுரங்களுடன் போட்டியிடப் புறப்பட்டனவோ என்று கூறத்தக்க முறையில் அடிகோலப்பட்டுப் பின் முடிவுறாமலே நிற்கின்றன. |
திருமலை நாயக்கனைப் போலவே சொக்கநாத நாயக்கனும் (1662-1682) வலிமையுடையவனாயிருந்தான். அவனும் பேரவாவுடன் அரசியல் சூழ்ச்சி வலை விரித்து, அதில் மதுரையைச் சிக்க வைத்தான். அவன் ஆட்சி இறுதியில் மதுரை சீரழிவுற்றது. ஆயினும் இரண்டாட்சி கழிந்து அரசி மங்கம்மாள் (1689-1704) தன் கணவன் இறந்தபின்தானே ஆட்சியைக் கைக்கொண்டு மதுரையை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தினாள். கோயில்குளங்கள், சத்திரங்கள், சாலைகள் போன்றவைகளை கட்டிய மங்கம்மாளின் புகழ் இன்றளவும் நிலை நிற்கின்றது. |
தஞ்சையைப் புகழுடன் ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி சொக்கநாதர் சூழ்ச்சிகளிடையே வீழ்ந்தது. மராட்டிய வீரர் அதனைக் கைக்கொண்டனர். சிவாஜி தஞ்சையையும் செஞ்சியையும் கைக் கொண்டான். அவுரங்கசீப்பின் படைத் தலைவரும் இந்நாளில் தமிழகத்தின்மீது படையெடுத்துக் குழப்பநிலை உண்டுபண்ணினர். |
விசயரங்க சொக்கநாதன் (1804-1731) ஆட்சியில் படை யெடுப்புகளால் மதுரை சீரழிந்தது. விசயரங்க சொக்கநாதன் அச்சமயத்தில் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் வரம்பில்லாமல் பணத்தை வாரி இறைத்து ஆட்சியைச் சீர்குலைத்தான். |