பக்கம் எண் :

51
 
பாபிலோனுக்குத் தம் சரக்குகளை அனுப்பினர். செங்கடல் வாணிகத்தை அராபியர் தம்
கைக்குள் வைத்திருந்ததால், கி.மு.2600 முதல் தென்னாட்டினர் எகிப்தியருக்கு வேண்டிய
மிளகு, திப்பிலி, தேக்கு, குங்கிலியம், தானியங்கள், புலித்தோல், தந்தம், பொன் ஆகிய
சரக்குகளைக் கிழக்காப்பிரிக்கா மூலம் அனுப்பினர். ஆப்பிரிக்காவிலேயே
கட்டடத்துக்குரிய மரங்கள் இருந்தாலும், தென்னாட்டுத் தேக்கே உயர்வாகக்
கருதப்பட்டு உயரிய கட்டடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. தவிர, அவுரியும்
நல்லெண்ணெயும் தென்னாட்டினராலேயே அங்கே வாழ்வில் புகுத்தப்பட்டன. 'பண்டு'
நாட்டிலிருந்தும் *'ஒஃவிர்' என்ற அதன் துறைமுகத்திலிருந்தும் கலங்கள் அடிக்கடி
சென்று வந்தன. 'பண்டு' என்பது தென்னாட்டுப் பாண்டிய நாடு, 'ஒஃவிர்' என்பது
கன்னியா குமரியை அடுத்த உவரி என்ற பண்டைத் துறைமுகம். அது தங்கத்துக்கும்
முத்துக்கும் பேர் போனதாயிருந்தது.
 
     கீழ்த்திசையில் தமிழர் சீனரிடமிருந்து செவ்வந்திக்கல், பட்டு முதலிய பொருள்கள்
தருவித்தனர். கரும்புப்பயிர்த் தொழிலைச் சீனரிடமிருந்தே பண்டைத் தமிழ்
வேளிர்களுள் ஒருவன் கொண்டு வந்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன. ஆனால்
எகிப்துக்குச் செல்லும் சீனரின் சரக்குகள் பெரும்பாலும் நிலவழியாகவே சென்று வந்தன.
கி.மு.2000-ல் ஆரியர் படையெடுப்பால், நில வழிநாடுகளில் சீர்குலைபு ஏற்பட்டது.
அவ்வாணிகம் அதுமுதல் தமிழகக் கடல் வழியாகவே சென்றது. பெரும்பாலும் சரக்குகள்
கீழ்க்கடல் துறைகளில் இறங்கிப் பொதிமாடுகளால் சோழ பாண்டிய நாடுகள் கடந்து
மேல் கடல் துறைகளில் மீண்டும் கப்பலேற்றப்பட்டன.
 
     பண்டைய உலக வாணிகத்தில் தமிழகத்துக்கு இருந்த சிறப்பை இன்னும்
உலகமொழிகள் காட்டுகின்றன. அரிசி, இஞ்சி, அகில்,சந்தனம், கருவாப்பட்டை, மிளகு,
திப்பிலி ஆகிய சொற்கள் கிட்டத்தட்ட எல்லா உலகமொழிகளிலும், கிரேக்க,

* Ophir