பக்கம் எண் :

58
 
அருளிய அரசன் இவனே. 'விழாக்காலங்களில் நகர்வலம் வரும் முக்கட் செல்வர்
குடைக்கன்றி உன் குடை எக்குடைக்கும் சாயவேண்டாம்! என்று காரிகிழார் என்ற
புலவர் இவனைப் பாடியுள்ளார். இவன் வேளிரை அடக்கியாண்ட வீர அரசன் என்று
நெட்டிமையார், பெரும்பல்லியத்தனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாராட்டியுள்ளனர்.
மதுரைக் காஞ்சியில் குறிக்கப்படும் பாண்டியர் முன்னோருள் இவனொருவன்.
 
     பாண்டியரின் மீன் கொடியை இமயத்தில் பொறித்தவன் முதலாம் நெடுஞ்செழியன்
அல்லது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவான். கோவலனைக் கொல்வித்துக்
கண்ணகியின் சீற்றத்துக்கு ஆளானதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் பாண்டியன்
இவனே. இவன் காலம் ஏறத்தாழ, கி.பி. 151 ஆகும்.
 
     முதலாம் நெடுஞ்செழியனின் கீழ் கொற்கை இளவரசராயிருந்து, அவனுக்குப்பின்
கி.பி.190 வரை ஆண்டவன் வெற்றிவேற் செழியன். சிலப்பதிகாரக் கதையின்படி
கண்ணகி விழாவில் சேரன் செங்குட்டுவனுடனும் இலங்கைக் கயவாகுவுடனும்
கலந்துகொண்ட பாண்டியன் இவனே.
 
     கடைச்சங்கப் பாண்டியருள் வீர அரசனாகவும் வீரமிக்க கவிதை வல்லவனாகவும்
விளங்குபவன் இரண்டாம் நெடுஞ்செழியன் அல்லது தலையாலங் கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் ஆவான். பட்டத்துக்கு வரும் போது அவன் சிறுவனாயிருந்தான்.
அந்நிலையில் சேரரும் சோழரும் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான்,
பொருநன் ஆகிய ஐந்து வேளிரும் மதுரை மீது படையெடுத்தனர். தலையாலங்கானம்
என்ற இடத்தில் அவன் அவ் எழுவரையும் சிதறடித்து, சேரனைச் சிறைபிடித்தான்.
போருக்குமுன் அவன் எடுத்துக் கொண்ட சூளுரை (புறம் 72) தமிழ் இலக்கியத்திலேயே
ஈடும் எடுப்பும் அற்ற அரும் பெரும்பாடல் ஆகும். கற்புடைக் காரிகையையும் கலைத்
தமிழ்ப் புலவரையும் அவன் எவ்வாறு தன்