உயிரினும் அரசினும் சிறந்த செல்வங்களாகக் கருதினான் என்று அப்பாடல் காட்டுகிறது. தலையாலங்கானத்துப் போர் அக் காலத்திய மக்கள் உள்ளத்திலேயே வீறார்ந்த இடம் பெற்றது. அதனை உவமையணியாக எடுத்தாண்ட புலவர் பலர். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் இப்போரை விரித்துரைத்துள்ளார். கபிலரும் பரணரும் இந் நெடுஞ்செழியனையும், குறுங்கோழியூர் கிழார் அவனால் சிறைப்பட்டுக் கிடந்த சேரனையும் பாடியுள்ளனர். |
கடைச் சங்கத்தின் கடைசிப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி. கானப்பேரெயில் என்பது காளையார் கோயிலிள்ள வெல்லுதற்கரிய பழைய அரண், அதனை அழித்து, அதனை ஆண்ட வேங்கை மார்பனை இப்பாண்டியன் அடக்கிய செய்தியை ஐயூர் மூலங்கிழர் (புறம் 21) பாடியுள்ளார். இவ்வரசனுடன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், சேரமான் மாவெண்கோவும் நண்பராக ஒருங்கிருந்தபோது, அவ்வையார் அவர்களைப் (புறம் 367) பாடியுள்ளார். தமிழ் மூவரசர் காலவரையறைக்கு இப்பாட்டு ஓர் அருங்கலச் செப்பு ஆகும். |
இவன், தானே புலவன். அகநானூற்றிலும் (26) நற்றிணையிலும் (88) இவன் பாடல்கள் உள்ளன. அகநானூற்றைத் தொகுப்பித்தவனும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக மாபாரதத்தைப் பெருந்தேவனாரால் பாடுவித்தவனும் இவனே. |
திருவள்ளுவர் காலத்திய பாண்டியனும் ஓர் உக்கிர பெருவழுதியே என்பது மரபு. இதற்குச் சான்று கிடையாது. மேலும் திருவள்ளுவர் காலம் அவ்வையாருக்கும் பெரும்பாலான சங்கப் புலவர்களுக்கும் சிலபல நூற்றாண்டுகளேனும் முற்பட்டதாதல் தெளிவு. ஆகவே திருவள்ளுவர் காலப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்ற பெயருடையவனானால், அவன் முற்பட்ட வேறொரு உக்கிரப் பெருவழுதியாகவே இருத்தல் வேண்டும். |