பக்கம் எண் :

60
 
     கடைச்சங்கம் முடிவடைந்தது கி.பி. 250-ல் என்னலாம்.
 
     கடைச்சங்கப் புலவரால் பாடப்பெற்ற பாண்டியர், சோழர் மிகப்பலர். வரிசை
முறையும் காலவரையறையும் ஏற்பட்டாலன்றி அவர்கள் செய்திகளை வரலாறாகத்
தொகுக்க முடியாது. நன்மாறன் என்ற பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்குப்
பிற்பட்டவன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர். திருவிளையாடற் புராணத்து வரகுணனும்,
அவன் பின்வந்த பாண்டியரும், அவர்கள் காலத்தவரான மாணிக்கவாசகரும்
கடைச்சங்கத்தின் இறுதிக் காலத்தவரே என்பர் ஆசிரியர் மறைமலையடிகளார்.
 
சங்ககாலச் சோழர்:
 
     சோழ அரசரின் முன்னோராகப் புராண மரபு பல கற்பனை மன்னர்களின் கதை
வளர்த்துள்ளது. பறக்கும் கோட்டைகள் மூன்றை வென்ற தூங்கெயில் எறிந்த
தொடித்தோட் செம்பியன், ஆன்கன்றுக்காகத் தன் மகனைப் பலியிட்ட மனுச்சோழன்,
புறாவுக்காகத் தன்னைப் பலியிட்ட சிபிச் சோழன் ஆகியவர்கள் கதை பழைமை
வாய்ந்தது. ஆனால் இவை வரலாறு என்று கூறுவதற்கில்லை.
 
     சோழருள் காலத்தால் மிக முற்பட்டவன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
இவனுக்குப்பின் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் முதலாம் கரிகாலனும் உருவப்
பஃறேர் இளஞ்சேட் சென்னியும், இரண்டாம் கரிகாலனான கரிகாற் பெருவளத்தானும்
ஆண்டனர். கரிகாற் பெரு வளத்தான் புதல்வியான நற்சோணை அல்லது
மணக்கிள்ளியே சேரன் செங்குட்டுவனின் தாய்.
 
     வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்ற சேர
அரசனுடன் போரிட்டு மடிந்தான். ஆனால் அடுத்த அரசன் முதலாம் கரிகாலன்
வெண்ணிப் போரில் அச்சேரனை வென்றான். போரில் புறப்புண்பட்டதனால் சேரன்