பக்கம் எண் :

61
 
வடக்கிருந்து மாண்ட உருக்கமான காட்சியைக் கழாத் தலையார் என்ற புலவர் (புறம்
65) தீட்டிக் காட்டியுள்ளார். வெண்ணிப் போரை மாமூலனார் (அகம் 55), நக்கீரர் (அகம்
141), பரணர் (அகம் 125, 246, 376), கருங்குழலாதனார் (புறம் 7, 224) ஆகிய புலவர்கள்
பாடியுள்ளனர்.
 
     உறுவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி முதலாம்கரிகாலன் மகன். இரண்டாம்
கரிகாலன் தந்தை.
 
     காவிரிக்குத் கரை கட்டியவன் என்றும், இமயத்தில் சோழர் கொடியாகிய புலியைப்
பொறித்தவன் என்றும், காடாயிருந்த தொண்டை நாட்டின் பெரும்பகுதியை நாடாக்கி
வேளாளரைக் குடியேற்றியவன் என்றும் தென்னாட்டு வரலாற்றில் பெரும் புகழ்பெற்ற
அரசன் இரண்டாம் கரிகாலன். இவன் காலம் கி.பி.50 முதல் 90 வரை என்னலாம்.
பன்னூறாண்டுகளுக்குப் பின்னும் மைசூர், இராயலசீமாப் பகுதிகளிலுள்ள சிற்றரசர்
அவன் புகழ்மரபைத் தம் கல்வெட்டுக்களில் பாராட்டிப் பேசுகின்றனர். காலத்தாலும்
இடத்தாலும் வேறுபட்ட பலநாட்டு மன்னர், தாம் கரிகாலன் மரபினர் என்பதிலும்,
தம்முன்னோர் கரிகாலனுக்காகக் காவிரிக்குக் கரைகட்டியவர் என்பதிலும் அடையும்
பெருமை வியப்புக்குரியதேயாகும்! அதுமட்டுமன்று. இன்னும் கரிகாலன் செய்த
செயல்களைத் தெலுங்கு நாட்டு மக்கள் பாராட்டுகின்றனர். கல்வெட்டுக்களால் அவற்றின்
உண்மையறிந்த அறிஞர் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு கடந்த கரிகாலன் இறவாப்
புகழ்கண்டு மலைக்கின்றனர்!
 
     கரிகாற் பெருவளத்தான் தலைநகரை உறையூரிலிருந்து காவிரிப்பூம்பட்டினம்
அல்லது புகாருக்கு மாற்றினதாக அறிகிறோம். கடியலூர் உருத்திரங்கண்ணனார்
இவனைப் பட்டினப்பாலையாலும், முடத்தாமக் கண்ணியார் பொருநராற்றுப் படையாலும்
பாடினர். முந்திய நூலுக்காக அரசன் புலவருக்கு 16 நூறாயிரம் பொன் பரிசளித்ததாகக்
கலிங்கத்துப் பரணி குறிக்கிறது.