கரிகாலனைப் பற்றி எழுந்த புராணக் கதைகள் பல. இவை இரண்டு கரிகாலரையும் ஒன்றாக்கிவிட்டன. |
இரண்டாம் கரிகாலனின் புதல்வி நற்சோணை அல்லது மணக்கிள்ளி சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவியாதலால், சேரன் செங்குட்டுவன் தாய் ஆவாள். |
கரிகாலனுக்குப்பின் அவன் புதல்வர் நெடுமுடிக்கிள்ளியும் சேட்சென்னி நலங்கிள்ளியும் அரசுரிமைக்காகப் போராடினர். சேட்சென்னி உட்பட ஒன்பது சோழ இளவரசரைச் சேரன் செங்குட்டுவன் நேரிவாயில் போரில் முறியடித்து நெடுமுடிக் கிள்ளியை முடிசூட்டினான். ஆனால் காரியாற்றுப் போரில் அவன் மாண்டதால், நலங்கிள்ளியே மீண்டும் அரசனானான். |
நெடுமுடிக்கிள்ளி அல்லது கிள்ளிவளவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் கடல்கொள்ளப்பட்டதை மணிமேகலைக் குறிப்பிடுகின்றது. பீலிவளை என்ற நாககன்னிகை மூலம் அவனுக்கு இளந்திரையன் என்ற புதல்வன் இருந்தான். கிள்ளிவளவனால் அவன் காஞ்சியில் திரையர் கோன் அல்லது தொண்டைமானாக முடிசூட்டப்பட்டான். கரிகாலனைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே பெரும்பாணாற்றுப் படையில் இளந்திரையனைப் பாடியுள்ளார். நக்கீரரும் (அகம் 340) காட்டூர்கிழார் மகனார் கண்ணனாரும் (அகம் 85) வேங்கட மலையில் கண்ட மற்றொருதிரையனைப் பாடியுள்ளனர். திரையன், இளந்திரையன் என்ற பெயரொற்றுமையைப் பார்க்க பீலிவளை திரையர் குடிநங்கையே என்று எண்ண இடமுண்டு. |
சங்கப் பாடல்களால் கோப்பெருஞ் சோழன், இராசசூயம் வேட்டபெருநற் கிள்ளி, கோச்செங்கணான் ஆகிய சோழர்களைப் பற்றிப் பல செய்திகள் அறிகிறோம். ஆனால் இவர்களைக் காலவரிசைப் படுத்த முடியவில்லை. இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி அவ்வையார் காலத்தவன். கோச்செங்கணான் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களைக் கட்டியதாகத் திருமங்கை யாழ்வார் குறிக்கிறார். |