பக்கம் எண் :

64
 
கடல் வாணிகத்துக்குப் பாதுகாப்பும் ஆக்கமும் அளித்தான். தன்னை எதிர்த்த யவனரை
அவன் சிறைப்படுத்தி விடுதலைப் பணமாகப் பெரும் பொருள் பெற்றான். அவன்
தலைநகரமாகிய நறவு உரோம ஆசிரியர் பிளினியால் நவுரா என்றும், எகிப்தியநில
நூலாரான டாலமியால் நிட்ரியாஸ் என்றும் குறிக்கப் பட்டது. இரண்டாம் பத்தால்
தன்னைப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு இவன் உம்பற்காட்டுப் பகுதியையும்
தென்னாட்டின் 38 ஆண்டு வரியையும் பரிசாகத் தந்தான் என்று அறிகிறோம்.
 
     பல்யானை செல்கெழுகுட்டுவன் 25 ஆண்டு ஆட்சி செய்தான். அவன் கொங்கு
நாட்டின் மீது படையெடுத்து அகப்பா என்ற கோட்டையைக் கைப்பற்றினான். அயிரை
மலையம்மனுக்கு அவன் விழாவாற்றியதுடன, இரு கடல் நீரால் திருமுழுக்குப் பெற்றான்.
நெடும்பலி தாயன் என்ற ஆசிரியனுடன் அவன் துறவறம் பூண்டான். அவன்
மூன்றாம்பத்தால் தன்னைப்பாடிய பாலைக் கோதமனார் விருப்பப்படி, பத்துவேள்வி
முடித்து அவரையும் அவர் மனைவியையும் வானுலகுக்கு அனுப்பினான்.
 
     களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகள் ஆண்டான். நெடுமிடல் என்ற
குடிப் பெயரையுடைய அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோனை அவன்
அடக்கினான். கடம்பின் வாயில் என்ற இடத்தில் நன்னனை அவன் அழித்தான்.
வானவரம்பன் என்றும் நீர்கொப்புளிக்கும் நேரிமலையையுடையவன் என்றும் அவன்
புகழப் பெறுகிறான். நாலாம்பத்தால் தன்னைப்பாடிய காப்பியாற்றுக் காப்பியனாருக்கு
அவன் 40 நூறாயிரம் பொன்னும் அரசிற் பதியும் ஈந்து அவனை அமைச்சனாகக்
கொண்டான்.
 
     சேரன் செங்குட்டுவன் அல்லது கடல் பிறக்கோட்டிய குட்டுவனே சேரர் குடியில்
யாவரினும் புகழ்மிக்க பேரரசன். அவன் 55ஆண்டுகள் ஆட்சி செய்தான். இடும்பில்
என்ற இடத்தில் வெற்றிகண்டு, வியலூர், கொடுகூர் ஆகியவற்றை அழித்தான்.