பக்கம் எண் :

67
 
பல்குன்றக்கோட்டத்து நன்னன், வேங்கடமலைக் கும்பனூர் கிழான், வேங்கடமலைத்
திரையன், தெள்ளழசூரிலுள்ள எருமையூரன் ஆகியோர் இருந்தனர்.
 
     தமிழகத்துக்கு வெளியே முடியுடையரசர் ஆட்சி நெடுங்காலம் ஏற்படவில்லை.
வேளிர் இங்கே திரையர், பல்லவர், குறும்பர், சளுக்கர், இரட்டர், கடம்பர் எனப் பல
குடிப் பெயர் உடையவராயிருந்தனர். இவர்களில் பலர் பின்னாட்களில் முடியுடையரசர்
மரபினராயினர்.
 
வடதிசைப் பேரரசுகள்
 
     தமிழகத்துக்கு வெளியே தென்னாட்டின் முதற்பேரரசுகள் கலிங்கப் பேரரசும்
ஆந்திரப் பேரரசுமே. இவற்றுள் கலிங்கப் பேரரசு பழமையானது. ஆனால் அதன்
பழமையெல்லை, ஆட்சியெல்லை, மரபு ஆகியவை பற்றி நமக்கு எதுவும் நேரடியாகத்
தெரியவில்லை. அதன் வடபால் கங்கை வெளியில் குருபாஞ்சாலம், கோசலம், விதேகம்
அல்லது மகதம், காம்போசம் ஆகிய அரசுகள் நிலவின. ஆரியர், பாரசீகர், யவனர்,
சகர், குஷாணர், ஊனர் முதலியவர்கள் படையெடுப்பால் மேற்கு அரசுகள் தளர்ந்தன.
விதேகம் அல்லது மகதம் கி.மு.7-ம் நூற்றாண்டு முதல் தொடர்ச்சியாக சிசுநாகர், நந்தர்,
மெளிரியர், சுங்கர், கண்வர் ஆகிய மரபினரால் ஆளப்பட்டது.
 
     நந்தர்கள் கலிங்கத்தை வென்று ஆண்டனரென்று அந்நாட்டின் காரவேலன் காலக்
கல்வெட்டுக்களால் தெரியவருகின்றது. தெற்கேயும் குந்தள நாட்டை அவர்கள்
ஆண்டதாகப் பிறகாலக் கன்னடக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். அவர்கள் ஆட்சி
அசோகன் ஆட்சி எல்லையளவிலே தெற்கே தமிழக எல்லை வரை பரந்திருந்தது
என்று கொள்ள இடமுண்டு.
 
     நந்தர்கள் பெருஞ் செல்வத்தைப் பற்றிக் கடைச்சங்கப் புலவர் மாமூலனார்
பாடியுள்ளார். மாமூலனார் நந்தர் காலம் அதாவது கி.மு. 4-ம் நூற்றாண்டினர் என்று
இதனால் கருத இடம் ஏற்படுகிறது.