பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்)

கதம்ப வனத்தில் மூன்றுலகம் புகழும்படி அரசு செலுத்திய வீராதிவீர குண்டோதரராய சிங்க மகாசிங்கனுடைய அரண்மனை அந்தப்புரத்தில், அவனுடைய பட்டத்து ராணியாகிய சுவர்ணாம்பா தனியே உட்கார்ந்திருந்தாள். சிங்க ஜாதிக்குள்ளே இவள் தன் போலே அழகும், கல்வியும் பராக்கிரமமும் உடையவள் வேறில்லை யென்று தன் மனதுக்குள்ளே நினைத்திருந்தாள். இவளுக்கு அந்தக்காட்டில் வசித்த மிருகங்களனைத்திலும் அதிக அந்தரங்கமான சிநேகம் யாரிடத்திலேன்றால், விருத்திமதியென்ற எருமைச்சியினிடத்திலேயாம். அந்த விருத்திமதி வெயர்க்க வெயர்க்க ஓடியே வந்து சிங்கச்சி சுவர்ணா தேவியின் காலில் விழுந்தாள்.

"என்ன விஷயம்?" என்று சிங்கச்சி கேட்டாள்.

அப்போது விருத்திமதி சொல்லுகிறாள்:-

"மகாராணியே, கேள். இன்று காலை என் வீட்டுக்குப் பொன்னங்காட்டிலிருந்து என் தோழியாகிய நரிச்சி நல்லதங்கை வந்தாள். அவளை என் வீட்டுக்குள் புகுந்து இந்த ராஜ்யத்தின் சிப்பாய்கள் கைது பண்ணிக் கொண்டு போயினர். ஏதோ தவறுதலாகவே இந்தக் காரியம் நடந்துவிட்டதென்று நினைக்கிறேன். யாரோ அவள்மீது குண்டோதர மகாசிங்கனிடம் குற்றம் சார்த்திப் பேசியிருக்கிறார்கள். அதனால் அவளுக்கு இந்தக் கதி நேரிட்டுவிட்டது. "ஐயோ! நான் என்ன செய்வேன்? என்னுடைய உயிர்த் தோழியாயிற்றே! நான் இந்த அரண்மனைக்கு எத்தனையோ காலமாக உண்மையுடன் உழைத்து வருகிறேனே; என் வீட்டுக்கு வந்த தோழிக்குச் செய்யப்பட்ட அவமானம் எனக்கே செய்யப்பட்டது போலாகுமன்றோ? மேலும் அவள் பொன்னங்காட்டு வீரவர்ம ராஜனைக் குழந்தைப் பருவ முதலாக வளர்த்த செவிலித்தாய். அந்தவீரவர்மன் இவளைத் தாய்க்குச் சமானமாக ஆதரித்து வருகிறான்.