பக்கம் எண் :

பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை

"பட்டத்து ராணியுடன்" என்று விருத்திமதி சொன்னாள்.

"உனக்கும் மீனாக்ஷிக்கும் பேச்சுண்டோ இல்லையோ?" என்று நரிச்சி கேட்டாள்.

விருத்திமதி:- "பேச்சு வார்த்தை இல்லாமலென்ன? அதெல்லாம் உண்டு. போனால் வா என்று கூப்பிடுவாள். மஞ்சள் குங்குமமும் கொடுப்பாள். ஆனால் சுவர்ணாம்பா என்னிடம் தன்னுடைய அந்தரங்கங்களையெல்லாம் சொல்லுவது போலே மீனாக்ஷி சொல்ல மாட்டாள்" என்றாள்.

அப்போது நரிச்சி நல்லதங்கை:- "அந்த மீனாக்ஷிக்கு அந்தரங்கமான சிநேகம் யார்?" என்று கேட்டாள்.

விருத்திமதி:- "மல்லிச்சி மாணிக்கவல்லிக்கும் மீனாக்ஷிக்கும் உடம்பு இரண்டு, ஆனால் உயிர் ஒன்று" என்றாள்.

இப்படி இவ்விருவரும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று குண்டோதர ராய சிங்க மகாசிங்கருடைய சிப்பாய்கள் வந்து நரிச்சி நல்லதங்கையைக் கைது பண்ணி விலங்கு போட்டுக் கொண்டு போய்ச் சிறைப்படுத்தி விட்டனர். விலங்கு பூட்டும்பொழுது நரிச்சி கோவென்றழுதாள். விருத்திமதி "நல்லதங்காய், நீ பயப்படாதே. ஏதோ தவறுதலாக இவர்கள் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. நான் போய் சுவர்ணாம்பாவிடம் சொல்லி உடனே உன்னை மீட்கிறேன்" என்று சொல்லி அரண்மனைக்குப் போனாள்.