நல்லதங்கை:- "காரியம் நிறைவேறு முன்னே அதை மிகவும் பிராண சிநேகிதராக இருப்போரிடத்திலேகூட அனாவசியமாகச் சொல்லக் கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போகும். ஆதலால் பொறு, நிறைவேறினபின் சொல்லுகிறேன்" என்று வாக்களித்தாள். நல்லதென்று சொல்லி விருத்திமதி தன்வீட்டுக்கு விருந்தாக வந்த நரிச்சிக்கு ராஜோபசாரங்கள் செய்தாள். பரிவாரங்களுக்கும் யதேஷ்டமாக ஆகாரம் கொடுத்தாள். பிறகு சாயங்காலமானவுடன் நரிச்சி நல்லதங்கை விருத்திமதியை நோக்கி "இப்போதெல்லாம் நீ அடிக்கடி அரண்மனைக்குப் போய் வருவதுண்டோ?" என்று கேட்டாள். விருத்திமதி ஆமென்றாள். "உங்கள் குண்டோதர சிங்கனுக்கு நான்கு மனைவிகள் உண்டன்றோ?" என்று நரிச்சி கேட்டாள். விருத்திமதி தலையசைத்தாள். "பட்டத்து ராணியின் பெயர் யாது?" என்று நரிச்சி கேட்டாள். "பட்டத்து ராணி பெயர் சுவர்ணாம்பா" என்று சொன்னாள். "பேய்க்காட்டு காமாக்ஷி தனது தாயின் பெயர் மீனாக்ஷி என்று சொன்னாளே" என்றாள் நரிச்சி. அதற்கு விருத்திமதி:- "ஆமாம். அந்த மீனாக்ஷி மூன்றாவது ராணி. பட்டத்து ராணியைக் காட்டிலும் மீனாக்ஷியினிடத்திலே தான் குண்டோதரராய சிங்க மகாசிங்கருக்கு அதிகப் பிரியம்" என்றாள். நரிச்சி நல்லதங்கை:- "உனக்கு எந்த ராணியுடனே அதிக சிநேகம்?" என்று கேட்டாள். |