அப்போது நரிச்சி நல்லதங்கை தான் வீரவர்மனிடமிருந்து பிரிந்து அவனுக்குத் துரோகியாய் உத்தண்டி ராஜாவிடம் வேலை பார்ப்பதாகத் தெரிந்தால் எருமைச்சி தன்னைத் துரத்திவிடுவாள் என்று யோசித்து "ஆம், எல்லாரும் க்ஷேமந்தான்" என்றாள். "நீ இப்போது நேரே பொன்னங்காட்டிலிருந்து தான் வருகிறாயா?" என்று விருத்திமதி கேட்டாள். நல்லதங்கை:- "அன்று; நான் பேய்க்காட்டிலிருந்து வருகிறேன்" என்றாள். விருத்திமதி:- "அங்கே எதற்காகப் போயிருந்தாய்?" என்றாள். நல்லதங்கை:- "பேய்க்காட்டுக்கும் பொன்னங்காட்டுக்கும் சண்டையென்று நீ கேள்வியுற்றிருக்கக் கூடும். அந்தயுத்தம் நடப்பதை எப்படியேனும் தடுக்க வேண்டுமென்று கருதி, என்னை மாகாளி ராணி (வீரவர்மன் பத்தினி) சில செய்தி சொல்லிப் பேய்க்காட்டு ராணியாகிய காமாக்ஷியிடம் அனுப்பினாள். வந்த இடத்தில் காமாக்ஷி உங்கள் நாட்டரசனாகிய தன் பிதாவிடம் ஒரு ரகஸ்யமான செய்தி சொல்லி வரும்பொருட்டாக என்னை இங்கே அனுப்பினாள்" என்றதும், "என்ன ரகஸ்யம்?" என்று விருத்திமதி கேட்டாள். |