பக்கம் எண் :

பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை

"பார்த்தாயா! நாம் சண்டை தோற்று மானத்தையும் தேசத்தையும் பிராணனையும் சத்துருவிடமிருந்து காப்பாற்ற வேண்டுமே, அதற்கென்ன வழி செய்யலாமென்று கலங்கிக் கொண்டிருக்கிறோம். அந்தச் சமயத்தில் இவள் நம்மிடம் குழந்தைக் கதை பேசுகிறாள்! பார்த்தாயா! பெருச்சாளியாம், கோரையாம், பனைமரமாம், நரியாம்! என்ன பச்சைக் குழந்தை வார்த்தை!" என்று சொல்லி மிகவும் கோபத்துடன் உத்தண்டி அப்போது ஒரே பாய்ச்சலாக மனைவியின் மீது பாய்ந்து தன் நகங்களை அவளுடைய கழுத்தில் அழுத்தினான். சிங்கக் காமாக்ஷி லாவகத்தால் கழுத்தை திமிறிக்கொண்டு தன் கழுத்திலிருந்து இரத்தம் பொழிவதைக் கண்டு கோபத்துடன் தன் முன் வலக்காலால் உத்தண்டியின் முகத்தில் ஓங்கி அடித்தது. உத்தண்டி பெருஞ்சினத்துடன் கண்ணில் தீப்பொறி பறக்க, மீசை துடிக்க, ஹா! என்று கர்ஜனை புரிந்து "அடி பேயே, உன்னை இந்தக் கணத்திலே கொன்று போடுகிறேன் பார்!" என்று சொல்லித் தன் மனைவியின் கழுத்தைக் கடித்து இரத்தம் குடிக்கலாயிற்று. காமாக்ஷி உத்தண்டியின் காலைப் பல்லினால் கவ்வி இரத்தத்தை உறிஞ்சத் தொடங்கிற்று. அப்போது சண்டையில் உண்டான சப்தத்தைக் கேட்டு காமாக்ஷியின் பாங்கிச் சிங்கங்கள் சில அங்கோடி வந்தன. அவற்றைக் கண்டு உத்தண்டியும் காமாக்ஷியும் வெட்டுப் பற்களை மீட்டுக் கொண்டன. உத்தண்டி அந்தப்புரத்தை விட்டு வெளியே சென்றான். பேய்க்காட்டு விஷயம் இப்படி இருக்க, உத்தண்டியிடமிருந்து அவனுடைய மாமனாராகிய குண்டோதர ராஜன் அரசு செலுத்தும் கடம்பவனத்துக்குத் தூது சென்ற நரிச்சி நல்லதங்கை எப்படியானாள் என்பதைக் கவனிப்போம். நரிச்சி கடம்ப வனத்திற்குப் போன போது தன் பல்லக்கு பரிவாரங்களுடன் நேரே குண்டோதரராய சிங்க மகாசிங்கருடைய மாளிகையில் போய் இறங்காமல் ஏதோ மனதுக்குள் ஒரு தந்திரத்தை எண்ணித் தனக்கு முந்திய நட்புடையவளாகிய விருத்திமதி என்ற எருமைச்சியின் வீட்டிலே போய் இறங்கினாள். விருத்திமதி பொன்னங்காட்டரமனைக்கு முன்னொரு முறை சென்றிருந்த போது அவளுக்கு வீரவர்மராஜன் பலவிதமான பரிசுகள் கொடுத்துத் தனது ராஜ பதவியைக் கருதாமல் மிகவும் அன்பான வார்த்தைகள் கூறி விடுத்ததை அந்த எருமைச்சி தன் வாழ்நாளில் மிகப் பெரிய விசேஷ மென்றெண்ணி வீரவர்மனிடம் பேரன்பு பூண்டவளாய் எப்போதும் அவனையே ஸ்மரித்துக் கொண்டிருந்தாள். எனவே நரிச்சி நல்ல தங்கை வந்தவுடன் எருமைச்சி விருத்திமதி அவளிடம் "வீரவர்மனும் அவனுடைய ராணி மாகாளியும் குழந்தைகளும் க்ஷேமந்தானா?" என்று விசாரித்தாள்.