"ஆளைக் கண்டால் நரி வாலைக் குழைத்துக் கொண்டோடுமாம் போலே போலே" என்று கூவிக்கொண்டே வந்தான். திருடர் தாங்கள் வேறோரிடத்திலிருந்து திருடிக்கொண்டு வந்த நகைப் பெட்டிகளையும், பணப் பெட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடிப்போயினர். இவன் பிறகு வீட்டிலுள்ளாரை எழுப்பி அந்தப் பெட்டிகளைக் காட்டினான். வீட்டிலுள்ளார் 'நடந்த விஷயமென்ன?' என்று விசாரித்தார்கள். இவன் நடந்த விஷயத்தைச் சொன்னான். அப்போது வீட்டார் இவனாலேயன்றோ திருடர் கன்னம் வைத்துத் தமது வீட்டுப் பொருளைக் கொள்ளையிடாமலும், தமதுடம்பிற்குத் தீங்கு செய்யாமலும் ஓடினார்கள் என்ற நன்றியுணர்ச்சியால் அந்த நகைப் பெட்டிகளையும் பணப் பெட்டிகளையும் இவனுக்கே கொடுத்துவிட்டார்கள். இவன் அந்தத் திரவியத்தையெல்லாம் தாயாரிடம் கொண்டு கொடுத்து:- "எனக்குக் கல்யாணம் பண்ணி வை அம்மா" என்றான். அவள் இவனை நோக்கி:- "மகனே உனக்கு இந்த நிதியெல்லாம் எங்கே கிடைத்தது?" என்று கேட்டாள். இவன் நடந்த விவரங்களையெல்லாம் கூறினான். தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டு, அவனுக்கு ஒரு பெரிய பிரபுவின் மகளைக் கல்யாணம் செய்வித்தாள். பிறகு எல்லாரும் சௌக்கியமாக நெடுங்காலம் வாழ்ந்து கொண்டிருந்தனர்." என்று சிங்கச்சி காமாக்ஷி கதை சொன்னாள். அப்போது உத்தண்டி:- "இந்தக்கதையை என்ன நோக்கத்துடன் சொன்னாய்?" என்று கேட்டான். "உன் மனதிலிருந்த ஆயாசத்தை மாற்றி உனக்கு ஆறுதல் உண்டாக்கும் பொருட்டாகக் கதை சொன்னேன், வேறு நோக்கம் ஒன்றுமில்லை" என்றாள். |