முதலாவது:- 'நெட்டைப் பனைமரம் நிற்குமாம் போலே போலே' என்றான். இவன் கூவின சத்தத்தைத் திருடர் கேட்டு "ஓஹோ! நாம் இங்கு நிற்பதைக் கண்டு வீட்டிலுள்ளோரை எழுப்பும் பொருட்டாக எவனோ இப்படிக் கூவுகிறான்" என்றெண்ணிப் பயந்தார்கள். அந்தச் சமயத்தில் இவன்:- "பெருச்சாளி மண்ணைத் தோண்டுமாம் போலே போலே" என்று கூவினான். இதைக் கேட்டுத் திருடர்:- "அடே! நாம் கன்னம் வைக்கிறதைக் சுண்டுதான் இவன் இப்படிக் கூவுகிறான்" என்று கை கால் நடுங்கத் தொடங்கினார்கள். அப்போது இவன்:- "நடுக்குளத்திலே கோரை கிடந்து விழிக்குமாம் போலே போலே" என்ற தனது மூன்றாம் சாஸ்திரத்தை ஓதினான். கள்ளர்:- "அடா, நாம் அவசியம் ஓடிப்போக வேண்டும். நாம் இங்கே திகைப்புடன் விழித்துக்கொண்டு நிற்கிறோமென்பதை அந்த மனிதன் சயிக்கினையாகச் சொல்லுகிறான்" என்று பேசிக்கொண்டு சிலர் ஓடத் தொடங்கினர். இதற்குள் திருடருடைய சத்தம் இவன் காதிலும் படவே, "கொல்லைப் புறத்தில் ஏதோ பலர் காலடிச் சத்தமும், முணுமுணுக்கிற சத்தமும் கேட்கிறது. என்னவோ தெரியவில்லை. ஒரு வேளை திருடராக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் போய்ப் பார்ப்போம்" என்று யோசனை பண்ணிக்கொண்டு வந்தான். வரும்போதே தனது சாஸ்திரப் பாடத்தை மறக்காமல், |