பக்கம் எண் :

சந்திரிகயின் கதை - பூகம்பம்

பொதியை மலைச் சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புகள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பக்ஷிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஊரில் மற்ற வீதிகளினின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம், அதாவது பிராமணர் வீதி இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பக்ஷிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக் குழந்தைகள் - விசேஷமாகப் பெண் குழந்தைகள் - பேசும்போது, சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும், கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும், அற்புதமான குரலில் பேசின.

அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்குப் பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும்.